வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்!

0
288

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.
இந்த கொலை வழக்கின் சந்கேநபர்களை விசாரணை செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா 35 ஆவது சாட்சியாளராக இன்று தொடர்ந்து சாட்சியமளித்துள்ளார்.
6 அம் இலக்க பிரதிவாதியான துஷாந்தனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி வித்தியாவின் மூக்குக்கண்ணாடி மீட்கப்பட்டதாக இதன்போது அவர் கூறினார்.
சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலக்கோவையின் முதற்பிரதியின் 145 ஆம் பக்க பிரதிகள் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரையும் தாம் எதேச்சையாக சந்தித்ததாக விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அவருடனான கலந்துரையாடலின் போது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா என தான் விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னையும் தனது சகோதரரையும் அரச தரப்பு சாட்சியாளர்களாக மாற்றினால் இரண்டு கோடி ரூபாவை வழங்க முடியும் என 9 ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ்குமார், குறித்த மென்பொருள் பொறியியலாளரிடம் கூறியிருந்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை வருடங்கள் சந்தேகநபர்களிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட அழைப்பு விபரங்களின் அடிப்படையில், 10 பேரிடம் மேலதிகமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களான சந்திரகாசன் மற்றும் துஷாந்தன் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகள் ஊடாக மாப்பிள்ளை எனப்படும் நடராசா குமரேசனுடன் பல தடவைகள் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் எட்டு மாதங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மாப்பிள்ளை என்பவரிடம் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த வீதியால் பயணித்ததாக அறியக்கிடைத்த ஒருவரான பாலசிங்கம் பாலச்சந்திரன் என்பவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவருடைய வீட்டில் வைத்திய வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானேஸ்வரன் இளங்கேஸ்வரன் என்பவரிடமும் தனுராம் , தனுஜன் ஆகிய இரண்டு மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் புங்குடுதீவு ஆலடிச்சந்தியில் சுவிஸ்குமார் மற்றும் அவரின் சகோதரன் சசிதரன் , குகநாதன் , கோகிலன் ஆகியோர் வேனில் இருந்ததாக ஞானேஸ்வரன் இளங்கேஸ்வரன் வாக்குமூலம் வழங்கியதாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த சந்தேகநபர்கள் மே மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை வௌ்ளவத்தையிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமைக்கான பதிவு சான்று மாத்திரம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் 13 ஆம் திகதி 2 மணி தொடக்கம் 3 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதியில், கெசினோ சூதாட்ட விடுதி மற்றும் மதுபான விடுதியொன்றில் மது அருந்துவது போன்ற காட்சிகள் CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பிரதான விசாரணை அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.
ஐந்தாம் சந்தேகநபரின் வவுனியாவில் உள்ள வீட்டிலிருந்து கறுப்பு நிறத்திலான ஐபோன் ஒன்றும் , துஷாந்தன் என்ற சந்தேகநபரின் வீட்டிலிருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும் டெப் ஒன்றும் , மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்பதாம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரின் மனைவி கொழும்பு – 15, முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்த வீட்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சான்றுப்பொருட்கள் , பகுப்பாய்விற்காக நீதிமன்ற அனுமதியுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும், பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
சடலம் கிடந்த விதத்திற்கு அமைய , கடற்படையினரால் குற்றம் இழைக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக குறித்த சந்தேகநபர்கள் முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இதேவேளை, ஒன்பது சந்தேகநபர்களையும் நீதிபதிகள் முன்னிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
இன்றைய சாட்சியளிப்பின் பின்னர் வழக்கின் 35 ஆவது சாட்சியாளரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை நீதிமன்ற விசாரணைகளில் இருந்து விடுவிப்பதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்துள்ளது.
வழக்கு விசாரணை நாளையும் தொடரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here