அரசு சேவைகளில் தங்கள் தகுதிக்குரிய பணி வழங்க கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டதிற்கு ஒரு மாத காலமாகியும் தீர்வு கிட்டாத நிலையில், இன்று ஒரு மாதம் கடந்து போராட்டம் தொடர்கிறது.
கடந்த 22.02.2017 அன்று மட்டக்களப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது திருகோணமலை மற்றும் அம்பாரை ( காரைதீவு ) என விரிவடைந்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் இன்று ( 22)புதன்கிழமை தபால் நிலையம் வரை பேரணியொன்றை நடத்தினர்.
இந்த பேரணியின் முடிவில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சிறீலங்கா ஜனாதிபதிக்கு நூற்றுக்கணக்கான தந்திகள் தனித் தனியாக பட்டதாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரின் மத்தியில் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு இன்று புதன்கிழமை வருகை தருமாறு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை வேலையற்ற பட்டதாரிகள் கேட்டிருந்த போதிலும் எவரும் வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ..
தங்கள் பிரச்சனைக்கான தீர்வு குறித்து இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அழைப்பு அவர்களால் விடுக்கப்பட்டிருந்தது.