வடக்கு வைத்தியசாலைகளில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனைக்குத் தடை

0
126


வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை முற்றுமுழுதாக தடை செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கில் டெங்கு தொற்று தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்றைய தினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் இடம் பெற்றபோதே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத் தீர்மானம் குறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை போன்ற அனைத்து பிரதேசங்களிலும் கழிவகற்றல் முறை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்றும், கழிவுகளை தரம்பிரித்து அகற்றும் செயற்பாடுகள் சீரான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும். உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் போதனா வைத்தியசாலைகளில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனைகள் தடைசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் ஏனைய ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகளிலும் உடனடியாக பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட வேண்டும் என அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு ஆளணி பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தேவையான ஆளணி எண்ணிக்கையை உடனடியாக பட்டியலிட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்சியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம், உடுவில், நல்லூர், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் டெங்கு தாக்கத்தின் அளவு அதிகரித்துள்ளதென்றும் அப்பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வும் கடுமையான நடவடிக்கைகளும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் உரிமையாளர்கள் இல்லாத காணிகளுக்கு குறிப்பட்ட தினங்களுக்குள் துப்பரவு செய்வதற்கு கால அவகாசம் வளங்கப்பட்டு அறிவித்தல் பலகைகள் நாட்டப்பட வேண்டும் என்றும் குறித்த கால எல்லைக்குள் துப்பரவு செய்யப்படாதவிடத்து பிரதேச சபைகள் குறித்த காணிகளை துப்பரவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தை உரிமையாளர்களிடம் இருந்து அறவிட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here