ஆடு அறுக்க முதல் ஆணத்துக்குச் சட்டி நீட்டுதல்…!

0
664
ஆடு அறுக்க முதல் ஆணத்துக்கு சட்டி நீட்டுதல் என்பது கிராமத்து மொழி. ஆடு இன்னமும் வெட்டப்பட வில்லை. ஆனால் ஆணம் கேட்டு சட்டியைக் கொண்டு வந்து பிடித்தால் எப்படி இருக்கும் என்பது போல இந்தச் சொற்றொடர் அவசரப்படுவோரின் சூழ்நிலையை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டும்.
இந்த இடத்திலும் இச்சொற்றொடர் மிகவும் பொருத்தமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் அமெரிக்காவின்  உப ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைக் பென்சுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அந்த உரையாடலில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ட்ரம்ப் உடன் சந்திப்பை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டதுடன் இலங்கைக்கு எதிராக  ஐ.நாவில் பேசப்படும் போர்க்குற்றம் தொடர்பிலான விடயத்தை அப்படியே கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியிடம் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் 2017 ஜனவரி மாதமே தனது ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்பார்.
ஆக, பதவியை ஏற்க முன்னதாகவே இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான தீர்மானங்களை ஐ.நா சபை கைவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி உதவ வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன கோருகிறார் எனில், இதனையே ஆடு அறுக்க முதல் ஆணத்துக்குச் சட்டியை நீட்டுதல் என்று கூறிக்கொள்ளலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையும் நன்மதிப்பும் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் வாக்குப் பலமே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது.
உண்மையில் தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கருசனை இருந் திருக்குமாயின் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தாங்கள் உதவி செய்ய வேண்டும் என்றே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவ்வாறு கேட்காமல் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்றே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். இவ்வாறு கேட்டதற்குள் நிறைந்த அர்த்தமும் உள்ளார்ந்தமும் உண்டென்பது தெளிவு.
அதாவது போர்க்குற்ற விசாரணை என்ற விடயம் பேசுபடு பொருளாக இருக்கும் வரைக்குமே இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயமும் பேசப்படும்.
மாறாக ஐ.நா சபையில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணை என்பதை நீக்கிவிட்டால் அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை முழுமையாகக் கைவிட்டு விட முடியும் என்பதுடன் தமிழ்த் தரப்புக்கள் தங்களுக்கான தீர்வு என்ற விட யத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமலும் போகும்.
இதனாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற் பதற்கு முன்னதாகவே அவரிடம் போர்க்குற்ற விசாரணையில் இருந்து முற்றுமுழுதான விடுவிப்பைக் கோரியுள்ளார் என்பது புலனாகும்.
இதனை மேலும் ஆதாரப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அமைந்துள்ளது. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன படையினரைப் பலப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
ஆம், மகிந்த இரண்டு அடி பாய்ந்தால் நான் நான்கு அடி பாய்வேன் என்ற முடிவை ஜனாதிபதி மைத்திரி எடுத்துள்ளார் போலும்.
என்ன செய்வது இலங்கையின் வரலாற்றில் பண்டாரநாயக்க முதல் மைத்திரிவரை நான்கு அடி பாய்ந்து காட்டுவதிலேயே கருசனையாக இருக்கின்றனர்.
தமிழர்கள் எப்பாடுபட்டாலும் அது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதே நிதர்சனமானது.
Valampuri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here