அன்புக்குரிய தமிழக உறவுகளே! உங்கள் வேதனை எங்களையும் வாட்டுகிறது!

0
590
12607தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்தியால் தமிழகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தங்கள் முதலமைச்சரைக் காப்பாற்ற வேண்டும் என்று தவம் கிடக்கும் தமிழகச் சகோதரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்பதே ஈழத் தமிழ் மக்களின் பிரார்த்தனை.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது ஈழத் தமிழ் மக்கள் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்.
எங்கள் தொடர்பில் தமிழக சட்டசபையில் அவர் கொண்டு வந்த தீர்மானங்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நினைவுக்குரியவை.
2009இல் வன்னி யுத்தம் நடைபெற்ற போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால், எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் கணிசமாகக் குறைந்திருக்கும்.
என்ன செய்வது! எங்கள் தவக் குறைவு அப்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக  இல்லாதிருந்தார்.
இப்போது ஈழத் தமிழ் மக்கள் விடயத்திலும் வன்னியில் நடந்த போர்க்குற்றம் தொடர்பிலும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடு எங்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தந்தது.
ஆனால் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டமை தாங்கொணாத் துயர் தருவதாகும். அதிலும் 72 நாட்களாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல் நலம் தேறி வருகிறார்.
விரைவில் வீடு திரும்புவார் என்ற ஆறுதலான செய்தியை அடித்து நொருக்கி; நேற்று முன்தினம் அவ ருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட, எங்கள் தமிழகச் சகோரர்கள் அழுது புரண்டு அப்பலோ மருத்துவமனை வாசலிலும் ஆலயங்களிலும் நோன்பு இருக்கின்றனர்.
இதுகண்டு ஈழத் தமிழர்களாகிய நாம் மிகுந்த நெகிழ்வு அடைந்துள்ளோம். எங்கள் தமிழகச் சகோதரர்கள் ஆறுதல் அடைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சுகநலம் பெறவேண்டும் என இறைவனைக் கைதொழுகின்றோம்.
கூடவே தமிழகச் சகோதரர்களே! உங்கள் முதலமைச்சர் மீது – அரசியல் தலைவர் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் பக்தியும் மரியாதையும் கண்டு உலகமே வியக்கிறது.
ஒரு தலைவர் என்றால் இப்படியல்லவா! இருக்க வேண்டும். தங்கள் தலைவரின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற ஏக்கம் ஏற்பட அப்பலோ மருத்துவமனையைச் சுற்றிலும் கட்சித் தொண்டர்களும் பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அரச நிர்வாகிகளும் ஊண் உறக்கமின்றி இரவு பகலாக நின்று தவம் புரியும் உன்னதம் யார்க்கும் நடந்தில.
இந்த உன்னதத்தைக் காணும் போதெல்லாம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தன் மக்கள் மீது எத்துணை அன்பு கொண்டிருந்தார். தனது மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எவ்வளவு தூரம் பாடுபட்டுள்ளார் என்பதை நாம் உணர முடியும்.
இதை தங்கள் முதல்வருக்காக தமிழக மக்கள் நடத்தும் வழிபாடும் அழுது சொரிகின்ற கண்ணீரும் சான்றுபடுத்தும்.
அன்புக்குரிய தமிழகத்தின் சகோதரர்களே! நீங்கள் படும் வேதனை கண்டு நாம் பதறுகின்றோம். ஒரு உன்னதத் தலைவரின் உயிரை மீட்டுவிட வேண்டும் என நீங்கள் செய்யும் தவவேள்வியில் எங்கள் பிரார்த்தனையும் சேர்ந்து கொள்ளட்டும். அமைதி கொள்ளுங்கள். பொறுமை காத்தருளுங்கள்.
இதை மட்டுமே அரசியல் தலைமை இல்லா ஈழத் தமிழினம் உங்களுக்குச் செய்தியாய் சொல்லி நிற்கிறது.
– வலம்புரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here