
பிரான்சை முடக்கப் போகும் ‘கருப்பு வியாழன்’: நவம்பர் 5 மாபெரும் வேலைநிறுத்தத்தால் போக்குவரத்துச் சேவைகளுக்கு வரும் மாபெரும் சிக்கல்!
விலைவாசி உயர்வுக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் கடந்த பல வாரங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வரும் நிலையில், இப்போது ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு (Grève) அழைப்பு விடுத்துள்ளது. நாளை , வியாழக்கிழமை (நவம்பர் 5) நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தால் பிரான்ஸ் நாடே முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. பொதுத்துறை, தனியார் துறை, ஆசிரியர்கள், மருத்துவர்கள், வங்கி ஊழியர்கள் எனப் பல்துறையினரும் களமிறங்குவதால், அன்றைய தினம் பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து ‘கருப்பு வியாழனாக’ (Jeudi noir) மாறக் காத்திருக்கிறது!
. வியாழக்கிழமைப் பயணத் திட்டங்களை வகுப்பதற்கு முன்பாக இணையத்தளங்களில் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பணவீக்கம் (Inflation) 1.3 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு அதற்கேற்பவே மிகக் குறைந்த அளவிலான ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தற்போது பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதால், தங்களது ஊதியத்தை முன் திகதியிட்டு 2.6 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என Unsa உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்த ஊதிய உயர்வு மட்டுமன்றி, மேம்பட்ட பணி நிலைமைகள் மற்றும் சமூக ஒற்றுமையைக் காத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே தொடருந்துத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முழு வீச்சில் களமிறங்குகிறார்கள். இதன் விளைவாக, பிரான்சின் பல முக்கிய நகரங்களில் பேருந்துகள், நிலத்தடித் தொடருந்துகள் (Métro) மற்றும் வீதித் தொடருந்துகள் (Tramways) என அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் பெரும் நெருக்கடியைச் சந்திக்கவுள்ளன.


