செம்மணி இன அழிப்பு மனிதப் புதைகுழியின் உண்மைகளைப் புதைக்க முயலும் சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரல்!

0
26

!தொற்றுநோய் என்ற பெயரில் தமிழினஅழிப்பின் தடயங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம்!

தமிழினத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத இன அழிப்புக் குருதிச் சாட்சியமாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சிங்கள தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள புதிய ஆய்வறிக்கை கடும் அதிர்ச்சியையும் ஆழமான சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களாக இருக்கலாம் என்ற விளக்கம், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் இனஅழிப்புக் குற்றங்களின் தடயங்களை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தான கருத்தாகும். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஊகங்களைக் கொண்டு செம்மணியின் இரத்தம் தோய்ந்த வரலாற்றை மாற்றியெழுத எத்தனிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எச்சங்கள், பாடசாலைப் பைகள், பால் போத்தல்கள், விளையாட்டுப் பொருட்கள் என்பன வெறுமனே தொல்லியல் ஆய்வுக்குரிய பொருட்களல்ல. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி, பல தசாப்தங்களாகக் கண்ணீருடன் காத்திருக்கும் தமிழ்த் தாய்மார்களின் கேள்விகளோடு தொடர்புடைய தடயங்களாகும். இத்தனை மனிதர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களை யார் புதைத்தார்கள்? எந்தக் காலப்பகுதியில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கே உறுதியான பதில்கள் கண்டறியப்படாத நிலையில், தொற்றுநோயால் உயிரிழந்திருக்கலாம் என்ற விளக்கத்தை முன்னிலைப்படுத்துவது அறிவியல் ஆய்வின் பொறுப்புணர்வையே கேள்விக்குள்ளாக்குகின்றது.

எந்தத் தொற்றுநோய் இத்தனை உயிர்களைப் பலிகொண்டது? அதற்கான மருத்துவப் பதிவுகள் எங்கே? மரணங்களுக்கான நோயியல் தடயங்கள் எவை? தொற்றுநோய் மரணங்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் ஆய்வக முடிவுகள் எங்கே? இவற்றில் எதற்கும் தீர்க்கமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில், சாத்தியக்கூற்றை உண்மைக்கு மாற்றாக முன்னிறுத்துவது வரலாற்று நீதிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இதைவிடக் கடுமையான கேள்வி, பேராசிரியர் ராஜ் சோமதேவவின் முன்னைய ஆய்வுக் கருத்துகளுக்கும் தற்போதைய விளக்கங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடாகும். முன்னைய அறிக்கைகளில் குற்றவியல் சம்பவங்களுக்கான தடயங்களும் வழக்கத்திற்கு மாறான புதைப்பு முறைகளும் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இயற்கை மரணங்களையும் சமய அடக்க மரபுகளையும் முன்னிலைப்படுத்துவதற்கான புதிய அறிவியல் ஆதாரங்கள் என்ன என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். ஒரு மனித எலும்புக்கூடு அமர்ந்த நிலையில் காணப்பட்டதைக் கொண்டு அதனைச் சமய அடக்க மரபுடன் தொடர்புபடுத்துவது மட்டுமே அதன் மரணத்திற்கான விளக்கமாகிவிட முடியாது. குறிப்பாக, கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் எலும்புகளில் காயங்கள் காணப்பட்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் முழுமையான சுயாதீன தடயவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்..

செம்மணியின் வரலாறு இன்று ஆரம்பமானதல்ல. 1996ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் கொடூரமான மரணமும், அவரைத் தேடிச் சென்றவர்களின் படுகொலைகளும் தமிழினத்தின் நெஞ்சில் இன்றும் ஆறாத காயங்களாக நிலைத்திருக்கின்றன. அக்கொலைகளுக்காகத் தண்டிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, செம்மணியில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வெளியிட்ட தகவல்களை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பின்னணியைப் புறந்தள்ளிவிட்டு செம்மணியைச் சாதாரண மரணங்களின் புதைவிடமாகச் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2025 செப்டம்பர் மாத அறிக்கையிலேயே செம்மணியில் சட்டவிரோதமான புதைப்புகளும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளும் இடம்பெற்றிருக்கக்கூடிய நியாயமான சாத்தியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித எச்சங்கள் நெருக்கமாகவும் குறைந்த ஆழத்திலும் புதைக்கப்பட்டிருந்தமை உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய தடயங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசால் நிறுவப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவே இத்தகைய சந்தேகங்களை முன்வைத்திருக்கும் நிலையில், அவற்றுக்குப் பதிலளிக்காமல் தொற்றுநோய் என்ற ஊகத்தை முன்னிலைப்படுத்துவது எந்த வகையில் நியாயமாகும்?

தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்புக் குற்றச்சாட்டுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள், இராணுவ அடக்குமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதைத் தவிர்க்கும் சிறிலங்கா அரசுகளின் நீண்டகால அணுகுமுறையின் பின்னணியில், இந்தப் புதிய விளக்கம் மிகுந்த விழிப்புணர்வுடன் அணுகப்பட வேண்டியுள்ளது. இவ்வறிக்கை அரசின் நேரடித் தலையீட்டால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும், அதன் முடிவுகளைப் பயன்படுத்தி செம்மணி தொடர்பான குற்றவியல் விசாரணையைத் திசைதிருப்பவோ, இனஅழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளை மழுங்கடிக்கவோ முயன்றால், அது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் மற்றுமொரு பெரும் அநீதியாக அமையும்.

ஒரு தொற்றுநோயின் பெயரால் ஒரு இனத்தின் நீதிக்கான உரிமையைப் புதைத்துவிட முடியாது. ஒரு தொல்லியல் அறிக்கையின் ஊகத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்துவிட முடியாது. அதிகாரத்தின் செல்வாக்கால் வரலாற்றின் சாட்சியங்களை நிரந்தரமாக மௌனிக்கச் செய்துவிடவும் முடியாது.

எனவே, பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள தொற்றுநோய் மற்றும் இயற்கைப் பேரழிவு தொடர்பான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படாத விளக்கங்களை வன்மையாக நிராகரிக்கின்றோம். அவரது அறிக்கையின் அறிவியல் அடிப்படைகள், முன்னைய ஆய்வுகளுடனான முரண்பாடுகள் மற்றும் முடிவுகளுக்கான ஆதாரங்கள் அனைத்தும் சுயாதீனமான சர்வதேச நிபுணர்களால் மீளாய்வு செய்யப்பட வேண்டும். செம்மணியில் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனித எச்சமும் சர்வதேசத் தரத்திலான தடயவியல், டிஎன்ஏ, காலக்கணிப்பு மற்றும் குற்றவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். விசாரணைகளில் சர்வதேசப் பங்களிப்பும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

செம்மணி என்பது வெறும் மனிதப் புதைகுழியல்ல. அது தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் வரலாற்றுச் சாட்சியமாகும். அந்த மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிவதும், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற உண்மையை வெளிக்கொணர்வதும், குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதும் சர்வதேச மனிதநேயத்தின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

தமிழீழ மண்ணில் உயிரிழந்த மக்களின் உயிர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது கண்ணீரும், தலைமுறைகளைக் கடந்து தொடரும் நீதிக்கான போராட்டமும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் பலியாக்கப்பட அனுமதிக்கப்படக் கூடாது.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் உண்மையான மரணக் காரணங்களை மறைக்கும் எந்த முயற்சிக்கும் இடமளிக்க முடியாது. உண்மைகளை வெளிக்கொணரும் வரை, இனஅழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு நீதியை நிலைநாட்டும் வரை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை தமிழினத்தின் நீதிக்கான குரல் ஓயப்போவதில்லை!
மண்ணுக்குள் மனித உடல்களைப் புதைக்கலாம்; ஆனால் அவர்கள் மரணங்களுக்கான உண்மைகளையும் நீதிக்கான உரிமையையும் ஒருபோதும் புதைத்துவிட முடியாது! அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here