முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் கோரிக்கை!

0
17

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எதிர்வரும் மே 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையில்,   உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு மாவட்ட வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்க  தலைவி அமலநாயகி  இவ்வாறு தெரிவித்தார்.

16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இனஅழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை.

இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது, அதனை முன்னிட்டு எதிர்வரும் 12 திகதி தொடக்கம் 18 திகதி வரை இன அழிப்பு வாரத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

ஒரு இனமே அழிக்கப்பட்ட நாள் மே 18.அதனை யாராலும் மறுக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.

இந்த இனஅழிப்பானது சர்வதேசத்தின் உதவியுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது.

16 வருடங்கள் கடந்தும் சர்வதேசமும் எம்மை மறந்திருப்பதை நீனைத்து நாம் வேதனையடைகின்றோம்.

எதிர்வரும் மே 12ஆம் திகதியிலிருந்து வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மே 18ஆம் திகதி வரையில் இந்த இனஅழிப்பு வாரத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு கோரிநிற்கின்றோம்.

இறுதி யுத்ததின்போது பொருளாதார தடையினை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக அப்பாவி மக்கள் சாப்பிட உணவு இல்லாமல்,குடிக்க நீர் இல்லாமல். உப்பில்லா கஞ்சி அருந்தி உயிர் வாழ்ந்தவர்களும் அதுவும் கிடைக்காமல் பட்டினிசாவினையும் இந்த மே 18பேரழிவு நாள் ஏற்படுத்தியிருந்தது. 

அந்தவகையில் அந்த மக்களை ஞாபகப்படுத்தும் வகையில் மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் இன அழிப்பு வாரத்தில் இளைய சந்ததிக்கு இன அழிப்பு தொடர்பான விடயங்களை கொண்டுசெல்லும் வகையிலும் எமது உள்ளக் குமுறல்களை சர்வதேசம் வரையில் கொண்டுசெல்லும் வகையிலும் உப்பில்லா கஞ்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

இந்த இன அழிப்பு வார காலத்தில் களியாட்ட நிகழ்வுளை நிறுத்தி பல்லாயிரம் உயிர்கள் சிதைக்கப்பட்டு விதைக்கப்பட்ட இடமே முள்ளிவாய்க்கால் மண்.

அந்த இடத்தில் மே 18ஆம் திகதி அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு அங்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தி சர்வதேசத்திற்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்ட அனைவரும் முன்வரவேண்டும்.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும்.உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும்.

16 வருடங்களாக இந்த நாட்டில் ஒவ்வொரு அரசு உருவாக்கம் நடைபெறுகின்றபோதிலும் ஒவ்வொரு ஜனாதிபதியும் எங்களை ஏமாற்றியே சென்றார்கள்.எங்களுக்கு இலங்கைக்குள் எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அலுவலகம் கூட ஒரு கண்துடைப்பு நாடகத்தையே அரங்கேற்றியிருக்கிறது.நாங்கள் காணாம்போனவர்கள் பற்றி பல்வேறு தகவல்களை வழங்கியபோதிலும் அவர்கள் அது தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை.சர்வதேசத்திற்கு போடும் நாடகமே இதுவாகும்.

அனுர குமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் உரையாற்றும் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் வலி தெரியும், தமது குடும்ப உறுப்பினர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்,தனது தாய் பட்ட வேதனையையும் உணர்வதாகவும் காணாமல்ஆக்கப்படுதல் என்பது மிகவும் கொடூரமானது என பிரசார காலத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தீர்வுபெற்றுத்தருவோம் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஆட்சிக்குவந்த பின்னர் அவரது செயற்பாடு மாறுபட்டதாகவே உள்ளது.

அவரிடமிருந்து நாங்கள் எந்த மாற்றத்தினையும் உணரவில்லை.பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு அவர் தயாரில்லை.

அனுரகுமார திசாநாயக்க இங்கு ஒரு பிரச்சாரத்தினை முன்னெடுப்பதுடன் சர்வதேசத்தில் வேறு ஒரு பிரசாரத்தினை முன்னெடுக்கின்றார்.2017ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக சட்டம் வரும்போது சர்வதேச தலையீட்டுடன் காணாமல்ஆக்கப்பட்ட அலுவலகம் செயற்படமுடியும் என்று கூறியிருந்தார்கள்.ஆனால் அதனை ஜேவிபி.தான் மறுத்து பிரசாரம் செய்தது.

இவ்வாறான ஒருவர் ஒருபோதும் சர்வதேச விசாரணையை விரும்பமாட்டார்.உள்ளக விசாரணை என்ற ஒன்றின் கீழ் முடக்குவதற்கே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

குற்றம் செய்தவர்களே இந்த நாட்டு அரசாங்கமாகும்.குற்றம் செய்த அரசிடம் நாங்கள் எப்படி நீதி கோருவது?  சர்வதேசத்திடமே நாங்கள் நீதியை கேட்கலாம்.

இந்த அரசாங்கமும் இராணுவ கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எங்களை கூட சுதந்திரமாக நடமாட முடியாமல் பல புலனாய்வாளர்களை விட்டு எம்மை பின்தொடர்கின்றனர்.

முன்னைய ஆட்சிக்காலத்திலிருந்த அதே செயற்பாடுகள் இன்றும் இருந்து வருகின்றது. இந்த ஜனாதிபதி வரலாறு தெரியாத எங்கள் இளம் சமூகத்திடம் தன்னை நல்லவராக காட்டும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருகின்றார்.

வெளித்தோற்றத்தில் தன்னை நல்லவராக காட்டிக்கொண்டு சிங்கள அரசியலுக்குள் முழுமையாக சிக்கியுள்ளார்.

இந்த இன அழிப்பிற்கு சர்வதேசமே தீர்வு தர வேண்டும் அதற்காகவே நாங்கள் 16 வருடங்களாக கண்ணீரோடு காத்திருக்கின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here