கேணல் பரிதி அவர்களுடன் பயணித்த செயற்பாட்டாளர் ஒருவரின் உள்ளக் குமுறல் இது. இன்றைய நாளில் அதனை உங்கள் முன் பதிவிடுகின்றோம்.

இன்று 08,11,2026 ஞாயிற்றுக்கிழமை
இதே நாளில்தான் இந்த மண்ணில் எங்கள் உன்னதமான பொக்கிஷத்தை எம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்தெடுத்து நாம் அநாதைகளாக்கப்பட்டோம்.
இன்று மாவீரன் கேணல் பரிதி அண்ணா அவர்களின் நிகழ்வும் அவரது வீர மரணமும் எம் கண் முன்னே வந்து போவதோடு அந்த மாவீரன் படுகொலை செய்யப்பட்ட அந்த நாளையும் எம்மால் மறக்க முடிவதில்லை!அந்த மாவீரனோடு நாம் அனைவரும் இணைந்து பணி செய்தோம் என்பதை நினைவு கூர்ந்து நிற்பதோடு அவரின் நேர்த்தியான தலைமைத்துவ வழி நடத்தலை நன்கு அறிந்தவர்கள் என்ற வரையில் எமது மன ஆதங்கத்தை வெளிப் னபடுத்தும் பதிவாகவே இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!
இந்த வருடத்தோடு கேணல் பரிதி அண்ணா அவர்கள் எமது பணிமனைக்கு முன்பாகப் படுகொலை செய்யப்பட்டு 14, வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அந்த மாவீரன் விட்டுச் சென்ற பணிகளை நாம் நேர்த்தியாகச் செய்து வருகின்றோமா? என்ற நெருடல் எம் ஆழ் மனதைத் துளைபோடுகின்றது…!
ஆம் எங்கள் தேச விடுதலைக்காக உழைப்பவர்களே கேணல் பரிதி அண்ணா அவர்கள் தனது உயிரையும் துச்சமென நினைத்து அவர் தாயக மண் மீட்புக்காகவும் தான் வழி நடத்தி வந்த கிளைக்காகவும் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்கள் என்ற உயரிய பங்காளர்களுக்காகவும் இன விடுதலைக்காகவும் அனைத்தையும் அர்ப்பணித்த மாவீரன் அல்லவா?
இன்று அவரின் கனவு நினைவானதா?
நாம் அனைவரும் அவரின் இலட்சியம் வெல்ல உழைக்கின்றோமா?
அந்த மாவீரன் நேரத்தை உயிராக மதித்தவர், அத்தோடு ஒவ்வொரு செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசநலன் விரும்பிகளோடும் தொடர்பாடலை மிகவும் நேர்த்தியாகவும் கவனத்தோடும் அக்கறையோடும் கையாண்டு அவர்களை நேசித்தவர் அல்லவா?
எமக்கு முன் உதாரணமாக நின்று எம்மையெல்லாம் வழி நடத்தியவர் !
அவர் விட்டுச் சென்ற கடமைகளை நாங்கள் அனைவரும் இணைந்து செம்மையாகச் செய்வோம் என்ற அதீத நம்பிக்கையில் கிளையின் முன்னிலையில் தனது உயிரை நீத்தவர் இந்த துயர நிகழ்வையும் நாங்கள் ஒரு போதும் மறப்பதற்கில்லை!
ஆனால் இன்று எம்மில் சிலர் அனைத்தையும் மறந்து எத்தனையோ விலை மதிப்பற்ற உயிர்களைப் பறி கொடுத்த இனம் நாங்கள் என்பதையும் மறந்தவர்களாக…!
எக்கதியும் அற்ற நிலையில் எம்மை நேர்த்தியாக வழி நடத்த வேண்டியவர்கள் அசமந்தப் போக்குடன் உறங்கிப் போய் இருப்பதைக் கண்டு எம்மால் பார்த்துக் கொண்டும் இருக்க முடியவில்லை, எமது நியாயமான கருத்துக்களை சொல்ல முன் வந்தால் அதை ஏற்றுக் கொண்டு மாற்றத்தைக் கொண்டு வர முடியாமல் உள்ளதால் இந்தப் பதிவை உங்கள் முன் சமர்ப்பணம் செய்கிறேன்!
எமது மன ஆதங்கத்தை விழிப்புணர்வுடன் புரிந்து கொண்டு எமது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வளர்ச்சிக்கும், எங்கள் தேச நலன்களுக்கான செயற்பாடுகளுக்கும் எதிர்மறையாக நிற்காமல் அந்த மாவீரன் விட்டுச் சென்ற இலட்சியத்திற்கான வழி முறைகளையும் முன்னகர்த்த வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் என்பதை ஒரு போதும் மறவாமல் நீங்கள் அனைவரும் பொறுப்புணர்வோடு உங்கள் பணிகளைச் சீராகச் செம்மையாகவும் செய்வதே தூய பணி எனக் கருதுகிறோம்!
இனி வரும் காலங்களில் நாம் உறங்கிக் கொண்டிருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, சொல்லுக்கு முன் செயல் என்ற கருத்துக்கு அமைவாக உணர்வோடும் நேர்மையோடும் மாவீரன் கேணல் பரிதி அண்ணாவின் சத்தியத்திற்கு அமைவாக உறுதி எடுத்துக் கொண்டு தவற விட்ட பிழைகளைச் சீரமைத்து பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் செயல்பட முன் வர வேண்டும் இல்லையேல் காலம்தான் தீர்மானிக்க வேண்டும், மாற்றம் ஒன்றே மாறாதது என்று கேட்டு விடை பெறுகின்றேன்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி


