ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை:  நான்காவது நாள் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன!

0
663

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் நான்காவது நாள் சாட்சிப் பதிவுகள் இன்று இடம்பெற்றன.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்றைய அமர்வில் பிள்ளையானை கைது செய்த பிரதான குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளான கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ஆகியோரிடமும் கைது செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலை பிரதி அத்தியட்சகர் ஆகியோரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனைய எதிரிகளான இராணுவப் புலனாய்வு உறுப்பினர் எம்.கலீல் மற்றும் வினோத் எனப்படும் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த மதுசங்க ஆகியோரும் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here