சிம்பாப்வேயில் பதவி விலக தயாராகும் முகாபே!

0
414

சிம்பாப்வேயின் நீண்ட கால தலைவரான ரொபர்ட் முகாபே பதவியை இராஜினாமா செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இணங்கி இருப்பதாகவும் அது தொடர்பான கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
முகாபே மற்றும் அவரது மனைவி கிரேஸுக்கு குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுதலை அளிப்பது மற்றும் தனது தனியார் சொத்துகளை தக்கவைப்பது உட்பட முகாபேவின் பல நிபந்தனைகளுக்கு இராணுவ ஜெனரல்கள் இணங்கி இருப்பதாக அது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வட்டாரங்கள் ஊடாக தெரியவருகிறது.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் தோன்றிய முகாபே பதவியை இராஜினாமா செய்வதை நிராகரித்திருந்தார். இராணுவத்தின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இராஜினாமா செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக இடம்பெற்று வருவதாக கூறப்பட்டபோதும் அந்த கடிதம் முதலில் சபநாயகருக்கு அனுப்பப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரடி தொலைக்காட்சி உரையில் முகாபே இராஜினாமா செய்வது பற்றி கூற மறுத்தது சிம்பாப்வேயில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் வீட்டுக் காவலில் இருந்து வரும் முகாபேவுக்கு பதவியை இராஜினாமா செய்ய அவரது கட்சி திங்கள் மதியம் வரை கெடு விதித்திருந்தது. இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாகவும் எச்சரித்தது.
முகாபே பதவி விலகும்படி கோரி சிம்பாப்வேயில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் வினோதமான மற்றும் பரபரப்பு உரை ஒன்றை நிகழ்த்திய முகாபே, தான் பதவியில் நீடிப்பதாகவும், ஒரு சில வாரங்களில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் தனது சானு–பீ.எப் கட்சியை சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த உரையில் அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பதவி விலகலுக்கு பதிலாக, அவர், “கட்சியின் பாராளுமன்ற கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அதற்கு நான் தலைமையேற்பேன்” என்றார்.
சானு–பீ.எப், இராணுவம் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அவர், நாடு மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
“இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் என்ன சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் கவலைகளை, தலைமைத் தளபதி என்ற முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று அவர் தொலைக்காட்சியில் பேசினார்.
தனது சானு–பீ.எப் கட்சியின் கூட்டத்தில் முகாபேவை தலைமை பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கிய நிலையிலேயே அவர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
முகாபே அவ்வாறு விலகவில்லை என்றால், பதவி விலகல் குறித்த விசாரணை அவர் மீது நடைபெறும் என்று சானு–பீ.எப் கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடிய உடன் இந்த விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முகாபே பதவி விலகும் உடன்பாட்டின் அடிப்படையில் இடைக்கால ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன் முகாபே பதவி நீக்கிய துணை ஜனாதிபதி எமர்சன் மன்காக்வா சானு–பீ.எப் கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகாபே தனது மனைவி கிரேஸுக்கு அடுத்த தலைவராக வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலேயே மன்காக்வாவை பதவி நீக்கம் செய்தார்.
இதுவே பெரும் இராணுவ தலையீட்டுக்கு வழிவகுத்தது. எனினும் இதன் பின்னணியில் மன்காக்வா செயற்பட்டதாக நம்பப்படுகிறது.
கடந்த வாரம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தின் கவச வாகனங்கள் தலைநகர் ஹராரே விதிகளில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளன.
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோதும், நடந்தது ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல என்று அதன் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முகாபேயைச் சுற்றியிருக்கும் குற்றவாளிகளைக் குறிவைத்தே தாங்கள் நடவடிக்கை எடுக்க முற்படுவதாக இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் சிபுஸிஸோ மோயோ கூறினார்.
முகாபேயைச் சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு எதிராக ஆபிரிக்க ஒன்றியம், தென்னாப்பிரிக்க மேம்பாட்டுச் சமூகம் ஆகிய அமைப்புகள் எச்சரித்தன.
முகாபேயுடன் தொடர்ந்து பேச்சு நடத்தும் இராணுவத் தலைவர்கள் அந்த எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பதுபோல் தோன்றுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here