துயிலும் இல்லங்களை விடுவிக்க மீள நிர்மாணிக்க சபையில் ரவிகரன் எம்.பி. வலியுறுத்து!

0
8

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி; துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மாவீரர்களுக்கு பாராளுமன்றில் அஞ்சலிசெலுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கோயில்களாகப் போற்றும் துயிலுமில்லங்களை இடித்தழிப்புச் செய்துவிட்டு, நாங்கள் தெய்வங்களாக மதிக்கின்ற மாவீரர்களின் மேல் இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களுடன் உதை பந்து விளையாடும்போது, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் என எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே விடுவிக்கப்படாதுள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இடித்தழிப்புச்செய்யப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை மீள நிர்மாணிப்பதற்கும் இந்த அரசு ஒத்துழைப்பு நல்கவேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 05.11.2026இன்று உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையைத் தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே,

இது நவம்பர் மாதம்,
தமிழ்தேசிய இனத்தின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம்செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் போற்றி வணங்கும் புனித மாதம்.

எம்மினத்தின் விடுதலைக்காக ஈடிணையற்ற ஈகங்களைப் புரிந்த எம் மாவீரச் செல்வங்களுக்கு இந்த பேரவையிலே தலைசாய்த்து அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நவம்பர் மாதம் தொடங்கியதும் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர்களின் நினைவால் எழுச்சிகொள்கின்றது. மாவீரர் துயிலுமில்லங்கள் வழிபாடுகளுக்காகத் தயார்ப்படுத்தப்படுகின்றன.

எனினும் சில மாவீரர்துயிலுமில்லங்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம், அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் தற்போது இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே மாவீரர்களை விதைத்த இடத்தில், மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்த முடியாமல் மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் தவிக்கின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட கையோடு தமிழர் தாயகப்பரப்பிலிருந்த அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் இடித்தழிப்புச் செய்யப்பட்டன.

நாங்கள் கோயில்களாகப் போற்றும் துயிலுமில்லங்களை இடித்தழிப்புச் செய்துவிட்டு, நாங்கள் தெய்வங்களாக மதிக்கின்ற மாவீரர்களின் மேல் இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களுடன் உதை பந்து விளையாடும்போது, இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் என எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்?

எனவே இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எற்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், விடுவிக்கப்படாத மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இடித்தழிப்புச்செய்யப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை மீள நிர்மாணிப்பதற்கும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென இப் பேரவையின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here