மீண்டும் ஒரு பெரும் சமூக-அரசியல் கொந்தளிப்பைச் சந்தித்துள்ள பிரான்ஸ்!

0
17

பிரான்ஸ் மீண்டும் ஒரு பெரும் சமூக-அரசியல் கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. மோசமடைந்து வரும் கல்வி வாய்ப்புகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், சரிந்து வரும் பொதுச் சேவைகள் குறிப்பாக அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு நாடு தழுவிய இயக்கமாக இது உருவெடுத்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மஞ்சள் உடை ஆர்வலர்கள் இந்தப் போராட்டங்களில் இணைந்துள்ளனர். இவற்றில் வன்முறை மோதல்களும், காவல்துறை அடக்குமுறைகளும் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாகக் குவிந்து வந்த பரந்த பொருளாதார மற்றும் அரசியல் குறைபாடுகளை இந்தப் போராட்டம் வெளிப்படுத்துகிறது.

வீட்டுவசதி, வேலைவாய்ப்பு, கல்வி, ஊழல் நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் தொடர்பாக ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் அல்பேனியா முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், அவை ஒரு பொதுவான கேள்வியை எழுப்புகின்றன. அடிப்படை சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் பொருளாதாரக் கொள்கைகளின் சுமையை ஏன் சாதாரண மக்கள் சுமக்க வேண்டும்? என்பதுதான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் , சர்வதேச தீவிர வலதுசாரிகளின் சில பிரிவுகளும், குடியேற்றம் மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் முஸ்லிம்களின் இருப்பு ஆகியவற்றின் மூலம் இந்த அமைதியின்மையை விளக்க முயன்று வருகின்றனர். இத்தகைய விளக்கங்கள், பொருளாதார நிலைமைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி இலட்சக்கணக்கான மக்களை வீதிகளுக்குக் கொண்டுவந்த நிலைமையைப் புறக்கணிக்கின்றன.

அரசாங்கங்களின் முன்னுரிமைகளுக்கும், குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியே முக்கியப் பிரச்சினையாகும்.நெருக்கடி எவ்வாறு வேகம் பெற்றது? 2026 செப்டம்பரில், ஆசிரியர் பற்றாக்குறை, நெரிசல் மிகுந்த வகுப்பறைகள், மோசமடைந்து வரும் வசதிகள் மற்றும் நிச்சயமற்ற கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணிதிரண்டபோது இந்தப் போராட்டங்கள் தொடங்கின. விரைவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் இதில் இணைந்தனர். அவர்கள் இந்தக் குறைகளைத் தரம் குறைந்து வரும் பொதுச் சேவைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர்.

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில், தொழிலாளர்கள், பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) மற்றும் மஞ்சள் ஆடை ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்று, இந்த இயக்கம் நாடு தழுவிய அளவில் விரிவடைந்தது . அக்டோபர் 17 அன்று, 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், பாதுகாப்புப் படையினருடனான மோதல்கள் வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளையாக முற்றியது. இதில் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிமோஜஸ் நகர மண்டபமும் அழிக்கப்பட்டது.சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், காவல்துறையினர் கண்ணீர்ப் புகை, அதிர்ச்சித் துப்பாக்கி சூடு, மற்றும் பிற கட்டுப்பாட்டுத் தடை நடவடிக்கைகளைப் பயன்படுத்தினர்.

மேக்ரானால் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளில் வேரூன்றியுள்ளது என்பதே உண்மையான காரணம்.

பெரு நிறுவன சார்பு
கடந்த 2017-ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து, வணிகப் போட்டித்திறனை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை மேலும் நெகிழ்வுத்தன்மை உடையதாக மாற்றுதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட கொள்கைகளை மக்ரோன் பின்பற்றி வருகிறார். அவரது அரசாங்கம் மூலதனம் மற்றும் வணிகங்கள் மீதான சில வரிகளைக் குறைத்தது, சந்தை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயன்றது. இந்த நடவடிக்கைகள் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று வாதிட்டனர். அவற்றின் பலன்கள் சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் பெருகிவரும் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.

பெரும்பாலான நிதிச் சொத்துக்கள் மீதான செல்வ வரியை ஒழித்து, அதற்குப் பதிலாக ஒரு குறைந்த செல்வ வரியைக் கொண்டுவந்ததும், பெருநிறுவன வரிவிதிப்பைக் குறைத்ததும், மக்ரோனின் கொள்கைகள் சமூகத்தின் செல்வந்தப் பிரிவினருக்குச் சாதகமாக இருந்தன. அதே நேரத்தில், பொதுச் செலவினங்கள் குறைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பாதித்தது.

மோதலுக்கான காரணங்கள்
முன்மொழியப்பட்ட எரிபொருள் வரி உயர்வுகளுக்கு எதிராக 2018-ல் தொடங்கிய மஞ்சள் ஆடை இயக்கம் , இந்த முரண்பாட்டை அம்பலப்படுத்தியது. இதில் பங்கேற்ற பலர், தனியார் போக்குவரத்தை அதிகம் சார்ந்திருந்ததும், பொதுச் சேவைகள் சரிந்து வந்ததுமான சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து வந்தனர். அவர்களின் கோபம், எரிபொருள் வரிவிதிப்பையும் தாண்டி ஊதியங்கள், சமத்துவமின்மை மற்றும் பாரிஸில் அரசியல் அதிகாரம் குவிவது வரையிலும் நீடித்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் இந்த முரண்பாட்டை மேலும் ஆழப்படுத்தின. தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களின் பெரும் பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பு இருந்தபோதிலும், மக்ரோனின் அரசாங்கம் சட்டப்பூர்வ ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64-ஆக உயர்த்தியது. தேசியப் பேரவையில் வழக்கமான இறுதி வாக்கெடுப்பு நடத்தாமலேயே, அந்தச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியலமைப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தியது, இந்த நிகழ்வுகள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின.

பிரான்ஸ் தற்போது கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. பொதுக் கடன் அதிகரித்து விட்டது, அதே வேளையில் வரவு-செலவுத் திட்டப் பற்றாக் குறையானது, ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% என்ற வரம்பை விட அதிகமாகவே உள்ளது. இதன் விளைவாக, செலவினங்களைக் குறைக்கவும், பொது நிதிகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

வரிவிதிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் செல்வப் பகிர்வு ஆகியவற்றை தனியாக ஆராய முடியாது. ஒரு அரசாங்கம், மற்ற நிதி முன்னுரிமைகளைப் பெரும்பாலும் மாற்றாமல் விட்டுவிட்டு, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு மீதான செலவினங்களைக் குறைக்க முடியும். இத்தகைய மக்கள் விரோத முடிவுகள் சமூக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எனவே, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துடன் தொடர்புடைய முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், மோதலுக்கான மற்றொரு காரணமாக மாறியுள்ளன.

பிரித்தாளும் சூழ்ச்சி
பிரான்சில் நிலவும் அமைதியின்மைக்குக் குடியேறிகள் காரணம். குறிப்பாக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் முயற்சியாகும், இது சமகால வலதுசாரி அரசியலின் ஒரு பகுதியாகும்.

டிரம்ப்பும் அவரது அரசியல் கூட்டாளிகளும் ஐரோப்பியக் குடியேற்றத்தை சமூகக் குழப்பத்தின் மூலமாக மீண்டும் மீண்டும் சித்தரித்து வருகின்றனர். பிரான்சின் தேசியப் பேரணி உட்பட, ஐரோப்பா முழுவதிலும் உள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளின் பிரச்சாரங்களிலும் இதே போன்ற வாதங்கள் இடம் பெறுகின்றன. இத்தகைய வாதங்கள், உண்மையான பொதுமக்களின் கவலையைச் சுரண்டி, அதை நலிவடைந்த சமூகங்களின் மீது திசை திருப்புகின்றன.

இந்த நேரத்தில் இந்தியாவின் மோடி அரசும் இதைத்தான் கட்டமைக்கின்றனர்.

காலனித்துவம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் போருக்குப் பிந்தைய தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய குடியேற்றத்தின் நீண்ட வரலாற்றை பிரான்ஸ் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோர், நாட்டின் தொழில்துறை மற்றும் சேவைப் பொருளாதாரங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கி உள்ளனர். அவர்களது சந்ததியினர் பலர், தலைமுறைகளாக நாட்டில் வசித்து வரும் பிரெஞ்சு குடிமக்களாக உள்ளனர்.

முஸ்லிம் வெறுப்பை உமிழும் வலதுசாரிகள்
இந்த நிலைமைகளை மதத்தை மட்டும் கொண்டு விளக்க முடியாது. அவை வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதில் பிரதிபலிக்கின்றன.முஸ்லிம்கள் மீதான அரசியல் அணுகுமுறையும் பெரும் சர்ச்சைக்குரியதாகி வருகிறது.

பிரான்சின் மதச்சார்பற்ற மரபான ‘ லாய்சித்தே’ (laicite), தொடக்கத்தில் மனசாட்சி சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத நிறுவனங்களை அரசின் அதிகாரத்திலிருந்து பிரிக்கவும் முயன்றது. சமீபத்திய பத்தாண்டுகளில், மத உடை, பொது அடையாளம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு குறித்த விவாதங்கள், முஸ்லிம் சமூகங்களைக் குறிப்பாகக் கூர்ந்து கவனிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.சமூக மற்றும் பொருளாதாரக் குறைகள், கலாச்சாரத்தின் மீதான ஈடுபாடு சார்ந்த கேள்விகளாக மாற்றப்படும் போதுதான் ஆபத்து எழுகிறது. மாணவர் மற்றும் தொழிற்சங்கங்களின் அணிதிரட்டலை குடியேறிகள் அல்லது முஸ்லிம்களின் எழுச்சியாகக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

அதுபோலவே, தனிநபர்களின் வன்முறைச் செயல்களுக்கான பொறுப்பை ஒட்டுமொத்த சமூகங்கள் மீது சுமத்தவும் கூடாது.ஊதியம், வரிவிதிப்பு மற்றும் பொதுச் செலவினம் ஆகியவற்றிலிருந்து விவாதம் விலகி, குடியுரிமை மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றை நோக்கி நகரும்போது, தீவிர வலதுசாரிகள் அரசியல் ரீதியாகப் பயனடைகின்றனர். அப்போது, பொருளாதார விரக்தியானது கொள்கை முடிவுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது வருவதற்குப் பதிலாக, சிறுபான்மையினர் மீது திசை திருப்பும் திருப்பனியை செய்து வருகின்றனர்.

தேர்தலுக்கான சூழ்ச்சி
வரும் 2027-ல் பிரான்ஸ் தனது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதால், மக்ரோனின் அரசியல் சிக்கல்கள் கடுமையானவையாக உள்ளன. தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்ததால், அவரால் உடனடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது அரசியல் கூட்டணி ஏற்கனவே நாடாளுமன்றப் பிளவு மற்றும் சரிந்துவரும் மக்கள் ஆதரவால் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைதியின்மை, அரசியல் மையத்தின் அதிகாரத்தை மேலும் பலவீனப்படுத்துகிறது.மரைன் லெ பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லாவின் தேசியப் பேரணிக் கட்சி, தங்களைப் பொது ஒழுங்கின் பாதுகாவலர்களாகவும், மக்ரோனின் தோல்வியுற்ற கொள்கைகளின் எதிர்ப்பாளர்களாகவும் காட்டிக்கொள்வதன் மூலம் இந்த நெருக்கடியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயன்றுள்ளன. இக்கட்சி, பொருளாதார நெருக்கடி குறித்த விமர்சனத்தை, குடியேற்றம் மற்றும் தேசிய அடையாளம் தொடர்பான நிலைப்பாடுகளுடன் இணைக்கிறது.

இடதுசாரி தரப்பில், ஜீன்-லூக் மெலென்ஷோன் மற்றும் ‘பிரான்ஸ் அன்பௌட்’ அமைப்பு ஆகியவை, வன்முறைச் செயல்களைக் கண்டித்த அதே வேளையில், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் சமூகக் கோரிக்கைகளையும் ஆதரித்துள்ளன. பொது அமைதியின்மை சர்வாதிகாரக் காவல் முறைக்கான கோரிக்கைகளை வலுப்படுத்தக்கூடும். அதேபோல், சிக்கன நடவடிக்கைகள் மீதான கோபம், மறுபகிர்வு மற்றும் வலுவான பொதுச் சேவைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும். சமூக அதிருப்தியானது, மேலும் ஜனநாயக ரீதியிலான பொருளாதார மாற்றங்களை உருவாக்குமா அல்லது தேசியவாத மற்றும் சர்வாதிகார அரசியலை வலுப்படுத்துமா? என்றால் சமத்துவத்திற்கான குரல் தான் உச்சத்தில் ஒலிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

1968 இயக்கம் 2026 ஒப்பீடு
மே 1968 முதல் அக்டோபர் 2026 வரை தற்போதைய இயக்கம், 1968 மே மாதத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரெஞ்சு எழுச்சியைத் தவிர்க்க முடியாமல் நினைவூட்டுகிறது . அந்த இயக்கம், சர்வாதிகாரப் பல்கலைக்கழகக் கட்டமைப்புகள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் நிலைபெற்ற அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுடன் தொடங்கியது.பின்னர் அது, இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் தொழிலாளர் வேலைநிறுத்தமாக உருவெடுத்தது.

இன்றைய மாணவர்கள் கல்வி வசதிகள், வேலைவாய்ப்புகள், வீட்டு வாடகைச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிரச்சனைகள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகள், தொடர்ச்சியான பொருளாதார விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகளிலிருந்து அல்லாமல், எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மையிலிருந்தே எழுகின்றன.

1968-ஆம் ஆண்டு தொழிலாளர்களும் சிறந்த ஊதியத்தையும் பணி நிலைமைகளையும் கோரினர், அதே வேளையில் சமகால இளைஞர் இயக்கங்கள் ஜனநாயகம், சமத்துவமின்மை மற்றும் அரசியல் அதிகாரம் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.இவ்விரு காலகட்டங்களும், பரந்த சமூக இயக்கங்களைத் தொடங்குவதற்கான மாணவர்களின் திறனை வெளிப்படுத்துகின்றன. பரந்து பட்ட சமூக முரண்பாடுகள் தீவிரமடையும்போது, கல்வி நிறுவனங்கள் அரசியல் அணிதிரட்டலின் மையங்களாக மாற முடியும் என்பதையும் இவ்விரண்டும் நிரூபிக்கின்றன.

ஐரோப்பா முழுவதும் போராட்ட அலை

பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கு எதிரான ஒரு பரந்த ஐரோப்பியக் கிளர்ச்சி பிரான்சில் நிலவும் அமைதியின்மை ஒரு பெரிய ஐரோப்பிய நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகிறது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில், விண்ணை முட்டும் விலைகள் மற்றும் சொத்து, ஊக வணிகத்திற்கு எதிரான போராட்டங்கள், சாதாரண குடிமக்களின் நலனுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் முதலீட்டாளர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் அம்பலப்படுத்தியுள்ளன. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சரிந்து வரும் பொதுச் சேவைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

அல்பேனிய உச்ச நீதிமன்றத்தில் தீ

அதே நேரத்தில், அல்பேனியா ஊழல் மற்றும் வேலையின்மைக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்கிறது.ஊழல் வழக்குகளில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்ததாக கருதி இளைஞர்களால் உச்ச நீதிமன்றம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது, கல்வி அமைச்சகம், நீதி அமைச்சகம், அல்பேனியா மத்திய வங்கி மற்றும் சில வணிக வங்கிக் கிளைகளும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டன.

அத்தியாவசிய சேவைகளின் வணிகமயமாக்கலும், பொதுச் செலவினக் குறைப்புகளும், குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே, எவ்வாறு சமத்துவமின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன என்பதை இந்த இயக்கங்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

இளைய தலைமுறையின் போர் குணம்
இந்தப் போராட்டங்களில் ஜென் Z ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஜென் ஆல்ஃபாவைச் சேர்ந்த இளம் மாணவர்களும் இதில் பங்கேற்கின்றனர். டிஜிட்டல் தளங்கள் அணி திரட்டலைத் துரிதப்படுத்தியுள்ளன. ஆனால், நீடித்த அரசியல் மாற்றம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்கள், பரந்த சமூகக் கூட்டணிகள் மற்றும் தெளிவான பொருளாதாரக் கோரிக்கைகளைச் சார்ந்துள்ளது. இந்தப் போராட்டங்களிலிருந்து இந்தியாவும் மற்ற நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

வேலையின்மை, அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, நலிவடைந்து வரும் பொதுச் சேவைகள் மற்றும் பெருகிவரும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பரவலான எதிர்ப்புகள் உருவாகியுள்ள இந்தியாவிற்கு, ஐரோப்பியப் போராட்டங்கள் முக்கியமான பாடங்களைக் கொண்டுள்ளன.விவசாயிகள் இயக்கம் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் வலிமையை வெளிப்படுத்தியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரிய கோரிக்கைகள் உட்பட, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக சமீபத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டங்கள், நேர்மையான தேர்தல் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் ஒப்புமையும் உள்ளது. பிரான்சில், தீவிர வலதுசாரிகள் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் குடியேறிகளையும் முஸ்லிம்களையும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவில், வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் ஆளுகையின் தோல்விகள் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக, இந்துத்துவா சக்திகள் இதேபோல் மத சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்களைப் பயன்படுத்தியுள்ளன. இத்தகைய அரசியல், மதப் பிரிவினைகளாக மாற்றும் காலனி ஆதிக்க சூழ்ச்சியாகும் இது.

பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம் ஆகியவை ஒன்றையொன்று வலுப்படுத்தக்கூடும் என்பதே இதன் விளைவாகும். காவல் துறை நடவடிக்கைகள், தேசியவாத மத வெறிப் பேச்சுக்கள் அல்லது தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றின் மூலம் அரசாங்கங்களால் பொதுமக்களின் கோபத்தை காலவரையின்றி அடக்கி வைக்க முடியாது. இளைய தலைமுறையினரின் அதிகரித்து வரும் பங்கேற்பு, பொருளாதார நீதி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான தேவை ஆகியவைகள் அதிகரித்து வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.

சமத்துவத்திற்கான போர் ஒருபோதும் ஓயாது என்பதே இவை உரக்கச் சொல்லும் நற்செய்தி!

நன்றி: த.லெனின்

ஜனசக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here