“தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்புக்கு இன்று 46 ஆவது அகவை!

0
2090

ltte-flag-1தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு இன்று  46-வது அகவையில் கால் பதிக்கிறது.

“தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தனது சிறந்த நெறிப்படுத்தலினாலும், அயராத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் .

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழர்கள் மீதும், தமிழர் வாழ்விடங்கள் மீதும் மேற்கொண்ட நடவடிக்கைகளே இதற்கு அடித்தளம் இட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயலால் இலங்கையில் இனச் சதவீதத்தில் தமிழர்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து  பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் மூலம் அப்பகுதிகளில் தமிழர் சதவீதம் குறைக்கப்பட்டது. சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்கும் சிங்களம் மட்டும் சட்டம், மற்றும் 1956 ஆம் 1958 ஆம் ஆண்டு இனக் கலவரங்கள் மேலும் 1970 இல் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் திட்டம் மூலம் இலங்கை பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் இலங்கை அரசின் மீது வெறுப்பை கொண்டிருந்தனர். காந்திய அகிம்சை கோட்பாடுகளை கைக்கொண்டு வந்த தமிழ் கட்சிகளின் அகிம்சைப் போராட்டங்களும் பலனற்றுப் போகவே, 1957 இன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்படுதல் போன்றச் செயற்பாடுகளால் மக்கள் தமிழ் அரசியல் தலைமைகளையும் நம்ப மறுத்தனர்.

இதன் விளைவாகத் தமிழர் தரப்பில் புரட்சிகர அரசியல் அமைப்பு ஒன்றின் தேவையையும், சிங்கள இனவாதத்திற்கு எதிராக போராடவேண்டிய தேவையும்,  தமிழர் தரப்பால் உணரப்பட்டது. இதன் விளைவே தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆங்காங்கு அரசுக்கு எதிராக போராடும் நோக்கில் சிதறுண்டு இருந்த இளைஞர்களை ஒன்றுச் சேர்த்து 1972 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது 17வது வயதில் “புதிய புலிகள்” எனும் அமைப்பை உருவாக்கினார்.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற இப் “புதிய புலிகள்” இயக்கமே 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டித் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் சுதந்திர தமிழீழமே இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்த ஒரு பெரும் விடுதலை அமைப்பாக உருப்பெற்றது.

இவ் விடுதலை அமைப்பே அனைவரும் வியக்கும் சாதனைகளைப் படைத்து மரபுவழிப் படையணி, கடற்படை, விமானப்படை எனும் முப்படைகளையும் கொண்ட ஒரு பெரும் விடுதலை அமைப்பாகவும் உலகிலே இதுவே முப்படை அமைத்த பெருமைக்குரிய அமைப்பாகவும் திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here