பிரான்சில் உணர்வு பொங்கிய சங்கொலி 2019 தேச விடுதலைப் பாடல்போட்டி!

0
1001

 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு – தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் வருடாந்தம் நடாத்தும் தேச விடுதலைப் பாடற்போட்டி சங்கொலி – 2019 கடந்த (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை LE BLANC MESNIL பகுதியில் 11 ஆவது தடவையாக எழுச்சியாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 08.08.1997 அன்று நெடுங்கேணியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த கப்டன் கலைவாணன் மற்றும் 31.12.1999 அன்று வீரச்சாவடைந்த மேஜர் அபிராமி ஆகியோரின் சகோதரன் ஏற்றிவைக்க, 1991 ஆம் ஆண்டு மின்னல் நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்த வீரவேங்கை ஈஸ்வரன் அவர்களின் சகோதரன் மலர் வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். நடுவர்களாக திரு.எஸ்.எஸ்.தில்லைசிவம் (ஈழநிலா இசைக்குழு, இசையமைப்பாளர் – சுரத்தட்டு ஆசிரியர்), கனகசபாபதி சேயோன் (இசைக்கலைமணி -நுண்கலைப்பட்டதாரி யாழ்.பல்கலை – இந்தியா), செல்வி நிலானி செல்வராசா (சங்கீத கலாஜோதி, ஆசிரியர்) ஆகியோர் அரங்கிற்கு அழைக்கப்பட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு.மாறன் அவர்கள் படிவங்களைக் கையளித்துவைத்தார். தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு, அதிஅதி மேற்பிரிவு, சிறப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. சிறப்பு விருந்தினராக லு புளோமெனில் நகரபிதா மற்றும் நகரசபை முக்கிய உறுப்பினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அவர்களுக்கான மதிப்பளித்தலினை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர் வழங்கியிருந்தனர். குறித்த நிகழ்வில் தாம் கலந்துகொண்டதையிட்டுத் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், சிறார்களின் பாடல்களை இரசனையோடு பார்த்து மகிழ்ந்ததைக் காணமுடிந்தது. இம்முறை சுவிஸ் நாட்டில் இருந்துவந்த தபேலா கலைஞர் பிரவீன் ஜெயந்திரன் மற்றும் நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகைதந்த தமிழமுதம் இசைக்குழு கலைஞர் இராசேகர் ஆகியோர் பிரான்சு கலைஞர்களோடு இணைந்து நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். மதிய இடைவேளையின் போது, விருந்தினர்களுக்கும் கலைஞர்கள், செயற்பாட்டாளர்களுக்கும் மதியபோசனமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் புலம்பெயர் தேசத்தில் தமிழீழத் தேசியப்பாடல் போட்டிகளின் முக்கியத்துவம் குறித்தும் கலைஞர்களின் பணிகுறித்தும் விளக்கியிருந்த அதேநேரம், தமிழ் மக்களுக்கு நீதிவேண்டி நடைப்பயணத்தை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களின் உன்னதமான செயற்பாடு குறித்தும் தெரிவித்திருந்தார். எதிர்வரும் 16.09.2019 திங்கட்கிழமை ஜெனிவாவில் அனைவரும் ஒன்றுசேரவேண்டியும் வலியுறுத்தியிருந்தார். நிகழ்வில் கடமையாற்றிய நடுவர்களும் அணிசேர் இசைக் கலைஞர்களும் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்ட அதேநேரம், நிகழ்வினை தமது அறிவிப்பினூடாகக் கொண்டுசென்ற அறிவிப்பாளர்களும் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். இம்முறை அறிவிப்பாளர்களாக கே.வினோத், கே.கிரிஸ்ணா, என்.குரு, ஏ.சத்தியா, பி.பார்த்தீபன், கே.இராகினி, ஈ.உதயமாலா, கே.கவிதா ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தனர். போட்டியின் நடுவர்களும் தமது கருத்துக்களையும் அனுபவத்தையும் பகிர்ந்திருந்தனர். கடந்த ஆண்டு சங்கொலி 2018 விருது பெற்ற செல்வி கோகுலதாஸ் சூர்யா அவர்களின் சிறப்புப் பாடலும் இடம்பெற்றது. அத்துடன் இதுவரை சங்கொலி விருதுபெற்ற வெற்றியாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறப்புப்பாடலை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைஞர்களின் சிறப்புப் பாடல்களும் நிகழ்வை அலங்கரித்திருந்தன.

சிறப்பு நிகழ்வாக விடுதலையின் வேர்கள் என்னும் சிறப்பு விருது வழங்கப்பட்டு கலைஞர் திரு.எஸ்.எஸ்.தில்லைச்சிவம் அவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டார். குறித்த மதிப்பளித்தலை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். விருதினைப் பெற்றுக்கொண்ட கலைஞர் திரு.எஸ்.எஸ்.தில்லைச்சிவம் அவர்கள் தமது உணர்வைப் பகிர்ந்திருந்தார். அவர்தெரிவிக்கையில், இந்த விருதை வழங்கிய பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்ததுடன்,இது தனது கலைப் பணிக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளதாகவும், தனது பங்கு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்திற்கு என்றும் இருக்கும் எனவும் மிக்க மகிழ்ச்சியோடு, வார்த்தைகளே வெளியில் வரமுடியாத உணர்வு பொங்கத் தெரிவித்திருந்தார். குறித்த மதிப்பளித்தலின் முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இம்முறை சங்கொலி 2019 விருதினை செல்வன் நவநீதன் யாழவன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அவருக்கு சங்கொலி விருதுடன், தங்கப்பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

சங்கொலி 2019 விருதினைப் பெற்றுக்கொண்ட அவர், தான் எதிர்பார்க்கவே இல்லை எனவும், தன்னால் நம்பமுடியாமல் இருப்பதாகவும் மெய்சிலிர்க்கத் தெரிவித்த அவர், இந்த நிகழ்வுகளில் வெற்றியோ, தோல்வியோ அதனை சமமாகக் கருதித் தான் சிறுவயதில் இருந்து பங்குபற்றிவந்தேன். அதுதான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுந்தந்தது. அனைவரும் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடனும் நிகழ்வுகள் நிறைவுகண்டன.

  • போட்டி முடிவுகள் :
  • பாலர் பிரிவு
  • 1ஆம் இடம் : சிறிதரன் அகஸ்திகா
  • கீழ்ப்பிரிவு
  • 1ஆம் இடம் : சசிதரன் தஷ்மிகா
  • 2ஆம் இடம் : சுரேஸ்குமார் தமிழினி
  • 3ஆம் இடம் : இதயகுமார் நிஸ்ரேயா
  • மத்தியபிரிவு
  • 1ஆம் இடம் : சத்தியநாதன் அமலியா
  • 2ஆம் இடம் : முகுந்தன் ஆதித்தியன்
  • 3ஆம் இடம் : சுரேஸ்குமார் சங்கீதன்
  • மேற்பிரிவு
  • 1ஆம் இடம் : தெய்வேந்திரம் ஹரிஹரணி
  • 2ஆம் இடம் : சத்தியநாதன் சுபீட்ஷா
  • 3ஆம் இடம் : தர்மசீலன் தர்மிகா
  • அதி மேற்பிரிவு
  • 1ஆம் இடம் : விஜேந்திரா அக்ஷயன்
  • 2ஆம் இடம் : உதயகுலசிங்கம் உவானா
  • 3ஆம் இடம் : செல்வகுமாரன் சரண்யா
  • அதிஅதி மேற்பிரிவு
  • 1ஆம் இடம் : சிறிநாதன் ஓவியா
  • 2ஆம் இடம் : ஜெயரூபன் துஷியந்தி
  • சிறப்புப் பிரிவு
  • 1ஆம் இடம் : முருகேசப்பிள்ளை விக்னேஸ்வரன்
  • 2ஆம் இடம் : சிவசுப்பிரமணியம் இரவீந்திரன்
  • 3ஆம் இடம் : பொஸ்கோ கனியூட்
  • சங்கொலி 2019 விருதுபெறுபவர் செல்வன் நவநீதன் யாழவன்  

(படங்கள்: இலங்கேஸ்)

( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here