தமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு சரித்திரம் !

0
1922


1979 இன் முற் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவராக விடுதலைப் போராட்டத்தில் அடியெடுத்து வைத்த கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். இயக்க விதிமுறைகளிற்கு அமைய வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கிட்டு என செல்லமாக அழைக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டு தை மாதம் 2ம் நாள் அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு மகனாகப் பிறந்த இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. தாயார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினரும் ஆவார். கிட்டுவும் அவரது சில தோழர்களும் தேசியத் தலைவர் அவர்களிடமே போரியலை நேரில் கற்றுள்ளனர்.

1983 பங்குனி மாதம். உமையாள்புரத்தில் ஒரு தாக்குதல் களம் தீர்மானிக்கப்படுகின்றது. அற்புதன் தலைமையிலான அணியில் கிட்டுவும் இடம்பெறுகிறார். வீதியில் கண்ணிவெடியைப் பொருத்திவிட்டு காத்திருக்கின்றார்கள். கண்ணிவெடிகளைக் கூடி உரிய முறையில் கையாளத் தெரியாத காலம். இராணுவ வாகனங்கள் இலக்கை நெருங்க முன்னர் அவ் வாகனங்களை கண்டு மிரண்ட ஆட்டுக் குட்டியொன்று கண்ணியில் கால்வைக்க கண்ணிவெடி வெடித்துவிடுகிறது. ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ வாகனங்களும் போராளிகளை நெருங்கிவர பின்வாங்குவதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால் கிட்டு மட்டும் சாதகமற்ற களநிலையையும் பொருட்படுத்தாது தனது ஜி-3 துப்பாக்கியால் சாரதியை இலக்குவைத்து தாக்க சாரதி காயப்பட்டதுடன் வாகனம் செயலற்றுப் போகின்றது. இது கிட்டுவின் தனித்திறமையை வெளிப்படுத்திய முதற் களமாக அமைந்தது. தொடர்ந்து 1983 சித்திரை மாதம் 7ம் நாள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ் கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஆனி 23ம் நாள் பெரும் போரியல் திருப்புமுனையை ஏற்படுத்திய திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதல் என்பவற்றிலும் கலந்து கொண்டார்.
யாழ்மாவட்ட தாக்குதற் தளபதியாக….
1983 இன் இறுதிப் பகுதியில் இந்தியாவிற்குப் ஆயுதப் பயிற்சிக்காச் செய்ற இயக்கத்தின் முதற் குழுவில் தளபதி கிட்டு இடம்பெற்றார். பயிற்சி முடித்து தாயகம் திரும்பியதும் 1984 பங்குனி 2ம் நாள் இடம்பெற்ற குருநகர் இராணுவ முகாம் உள்ளிட்ட பல தாக்குதல்களில் பங்கு வகித்து அவற்றை நெறிப்படுத்தினார். அக் காலத்தில் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் அவர்கள் 1985 தை மாதம் 9ம் நாள் வீரமரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ் மாவட்டத் தளபதயாக பொறுப்பேற்றதும் யாழ் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ் குடாநாட்டிலுள்ள சிங்களப்படைகளை முற்றாக முகாம்களுக்குள் முடக்கி முழுமையான கட்டுப்பாட்டிற்குள் நிலப்பிரதேசத்தை கொண்டுவந்த முதற் தளபதியாக கிட்டு பரிணமித்தார். கோட்டை, பலாலி, நாவற்குழி, ஆனையிறவு ஆகிய முகாம்களுக்குள் முடங்கிக் கொண்ட சிங்களப்படைகள் ”கிட்டு” என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கின. தென்னிந்திய சினிமா கதாநாயக மாயையை உடைந்தெறிந்து அந் நாட்களில் உண்மையான கதாநாயகர்களாக விடுதலைப் புலிப் போராளிகள் தம்மை நிலைநிறுத்தினர். அவர்களுள் முதன்மையானவராக கிட்டு விளங்கினார். அரசியல், இராணுவ வல்லுனநராக மட்டுமன்றி பொருளாதார மேம்பாட்டிலும் கரிசனையுடன் செயற்பட்ட கிட்டு தொழில் நிலையங்கள், நியாய விலைக்கடைகள், நூல் நிலையங்கள் என பல கட்டமைப்பை நிறுவி திறம்பட நிர்வகித்தார்.
மிகக் குறைந்தளவு ஆளணி வளங்கள், போராளிகளைக் கொண்டிருந்த போதிலும் அசாத்தியமான துணிச்சலும், இயல்பான ஆற்றலும் விடுதலைப் போராளிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கிட்டுவை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தி நின்றது.
யாழ் குடாவின் சிறுவர்கள் கூட ஒழித்து பிடித்து விளையாட்டு கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்களை கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே பனம் நாரையோ கட்டிக்கொண்டு அதில் ஒரு தடியை அல்லது திருவிழா துப்பாக்கியை செருகிக் கொண்டு கிட்டு மாதிரி நடந்து ஆமி இயக்கம் என விளையாடத் தொடங்கியிருந்தார்கள்.
நாவற்குழி முகாம் தகர்ப்பு முயற்சி
யாழ்ப்பாணத்தில் விஜகூழங்கைச் சிங்கையாரியன் காலம், பரநிருபசிங்கன் காலம், சங்கிலியன் காலம் என இருந்தது போல கிட்டுவின் காலமும் தீரத்துடன் பரிணமித்தது. யாழில் முகாம்களுள் முடங்கியிருந்த சிங்களப்படைகளை வெளியேற விடாது தடுப்பதில் கிட்டு அபரிதமாகச் செயற்பட்டார்.
பொன்னம்மானின் பாசறையில் வளர்ந்த போராளிகளாக கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறு பேர்வரையில் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார்.
உலகமே வியக்கக்கூடிய வகையில் விடுதலைப் போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் நாவற்குழி இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டுவும் அவரது தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.
தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி. சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.
பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எங்கோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல புதிதாக செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரிக்க வேண்டியிருந்த்து. ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்களுக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் தென்மராட்சிப் பொறுப்பாளர் கேடில்ஸ்தான். கேடில்ஸ் மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் அக்காலத்தில் உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ உலங்கு வானூர்திகளும் , குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். மாலை 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.
முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.
முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகளுடன் நின்றார்.
நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தாக்குதற் குழுக்களை சரிபார்த்துக் கொண்டு வந்த கிட்டு ஒரு தாக்குதற் குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார். பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.
பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்தபோது பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாகவும் அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றதாகவும், பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டது என்பதயும் ஊகிக்க முடிந்தது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர்கள் மறைந்து விட்டார்கள். கிட்டுவின் மனதில் மட்டுமன்றி தாயகமெங்கும் பெரும் துயர் தந்த சம்பவமாக மேற்படி சம்பவம் கிட்டுவின் காலத்தில் நிலையா இடம் பிடித்துக் கொண்டது.
விடுதலைப் போரில் பெரும் பின்னடைவை, துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்தாலும் பின்னால் ஏற்பட்ட பல வெற்றிகளுக்கான அடிப்படையை ஏற்படுத்திய சம்பவமாகவும் இது அமைந்தது.
இந்திய ஆய்வு பகுப்பாய்வுப் பிரிவின் கைவரிசை
தாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தரை முகம் ஒன்றில் இருந்து M.V. YAHATA என்கிற கப்பலில் சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர் என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடு கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும் மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.
கப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி தலைவர் பிரபாகரனிற்கு தாய்லாந்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை வெளிநாட்டு தொலைத் தொடர்பிற்கு பொறுப்பாகவும் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார். கப்பல் சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை அழித்து AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் தலைவருக்கு தெரிவிக்கும்படி கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது பின்னரே தலைவர் பிரபாகரனிற்கு தெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.
தளபதி கிட்டு தமிழ் நாட்டில் தங்கியிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் கிருபன் என்ற போராளியை தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார். கிருபன் மதுரையில் இருந்தபடி வேதாரணிய கடற்கரையை மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர் கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள் அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர்.
கிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். இந்த நிலையில் கிருபன் றோ அதிகாரிகளிற்கு கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.
சாவையும் சரித்திரமாக்கிய தளபதி
தளபதி கிட்டுவின் கப்பலை வழிமறித்த இந்தியக் கடற்படை கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் கிட்டு அதனை மறுத்தததோடு தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல்கள் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் எனவும் எச்சரிதனர். இந்தியக் கடற்படை கப்பலில் இருந்தவர்கள் இத் தகவலை டெல்லிக்கு தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்ததை அறிந்த இந்திய அதிகாரிகள் கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி மூலம் அதிரடிப்படையினரை இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்தது.
அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த தளபதி கிட்டு கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும் தற்பாதுகாப்பு படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார் சிறிய படகில் பணியாளர்கள் சிறிது தூரம் சென்றதுமே கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் பேரலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும் இந்திய பெருங்கடலுடன் சங்கமித்துக் கொண்டது. கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள். சில வருடங்களிற்கு பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள் என அறியக் கிடைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here