அரசியல் படுகொலைகளுக்கு நீதி கோரி பரிசில் போராட்டம்!

0
632


2013 ஆம் ஆண்டு பாரிசில் படுகொலை செய்யப்பட்ட மூன்று குர்திஸ்தான் பெண் செயற்பாட்டாளர்களது படுகொலைக்கு நீதி கேட்டு இன்று (06) பகல் 11.00 மணிக்கு பரிசு Gare du Nord இல் இருந்து republique வரை இடம் பெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்கள்.
வன்முறைகள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததுடன், பயணப்பொதிகள் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்கள்.
ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்தும் குர்திஸ்தான் மக்கள் பிரத்தியோக பேருந்துகளில் வந்து பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுத்து கொண்டதால் republique நிலக்கீழ் தொடருந்து நிலையம் பல மணிநேரம் மூடப்பட்டிருந்ததுடன், பல பேருந்துகளின் வழிதடங்கள் மாற்றப்பட்டிருந்தன.


இவர்களின் போராட்டத்தில் பரிசில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்படன் கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதி கேட்டு ஈழத் தமிழர்களும் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் இறுதியில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் ஈழத்தமிழர் சார்பில் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதி உரையாற்றினார்.

 

அவர் தனதுரையில், 09.01.2013 இல் பரிசின் நகர்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குர்திஸ்தான் போராளிகள் மூவர் அவர்களின் பணிமனையில் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அவர்கள் நீதி மறுக்கப்பட்ட  மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.
இந்தவகையிலேயே 26.10.1996 அன்று ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கந்தையா கஜேந்திரனும், தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்த கந்தையா பேரின்பநாதனும் பரிசு லாச்சப்பலில் படுகொலை செய்யப் பட்டார்கள் இவ்விதமே தமிழர் விடுதலைக்காக போராடிய போராளி தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதியாக இருந்த பரிதி என்று அழைக்கப்பட்ட மதிந்திரன் நடராஜா அவர்கள் 08.11.2012 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனைக்கு முன்னால் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி பலியானார். இவர்களின் படுகொலைகளின் குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன்னால் நிறுத்தப்படவில்லை.
பிரான்சில் இடம் பெற்ற 43 அரசியல் படுகொலைகளுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. குர்திஸ்தான் சகோதரர்களே, நண்பர்களே உங்களது உரிமைக்கான போராட்டத்திற்கு நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். எங்களது உரிமைகள் கிடைக்கும்வரை நாம் அனைவரும் ஓரணியில் தொடர்ந்து பயணிப்போம் எனத் தெரிவித்தார்.
இந்தப் பேரணியின் போது சர்வதேச ஊடகங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தன. பேரணியில் கலந்து கொண்டிருந்த ஈழத் தமிழர்களையும் நேர்காணல் கண்டிருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (05.01.2018) காலை 10.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளும், சட்டவாளர்களும், தமிழர் பிரதிநிதிகளும் அதில்க லந்து கொண்டிருந்தனர்.

உரிமைமறுக்கப்பட்ட மக்களுடன் ஈழத்தமிழர்களும் பங்கெடுபது எமது விடுதலைக்கு வலுச் சேர்பதாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here