2017 ஒரு பார்வை!

0
222

அமெரிக்கா – வடகொரியா பிரச்சனை, ஐ.எஸ் வீழ்ச்சி, ரோஹிஞ்யா அகதிகளின் சோக கதை என 2017 இல் நடந்த சில முக்கிய உலக நிகழ்வுகளை காணலாம்
ட்ரம்பின் அதிரடி:
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக ஜனவரி 20 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த ட்ரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் ட்ரம்ப் பிரபலமடைந்து வந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பந்தாடப்பட்டது, மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவது, 7 முஸ்லிம் நாடுகளின் அகதிகளுக்கு தடை, ஜெருசலேம் விவகாரம், வடகொரியாவுடன் தகராறு என ட்ரம்ப்உலகச்செய்திகளில் தொடர்ந்து தனி இடம் வகித்து வந்தார்.

ஆறுதல் இல்லாத சோகம்:
மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்யா முஸ்லிம்கள் சொந்தநாட்டு இராணுவத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டது இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம். பல்லாயிரக்கானோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 6 இலட்சம் ரோஹிஞ்யா மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுகியின் நிலை இந்த விவகாரத்தில் முற்றிலும் சிதைந்தது. ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனத்தை அடுத்து தற்போது, அகதிகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது.

ஏவுகணை சோதனைகள்:
அடுத்தடுத்த ஏவுகணை சோதனை, அணுகுண்டுகள் பரிசோதனை என உலக நாடுகளை பதற்றத்தில் வைத்திருந்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரியாவில் எந்த நேரத்தில் என்ன சோதனை நடக்கும் என அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை வைத்த கண் வாங்காமல் கவனித்து கொண்டிருந்தன. மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு விடுமோ என்று அனைவரும் அச்சப்பட்ட நிலையில், வெறும் வாய் தகராறுடன் நின்று கொண்டது.
கிம் ஜாங் உன்னும், டொனால்ட் ட்ரம்ப்பும் தங்களை ஜனாதிபதிகள் என்பதையே மறந்து தரைமட்ட அளவில் இறங்கி விமர்சித்துக் கொண்டனர். யாரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டதன் விளைவாக தடை மேல் தடையாக வடகொரியா மீது விழுந்தது. பெட்ரோல், டீசல் முதல் நிலக்கரி வரை அத்தியாவசிய பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொஞ்சம் கீழே இறங்கி வருவதற்கு வடகொரியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரக்கர்களின் அழிவு:
கடந்த 2014 முதல் வல்லரசு நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இந்த ஆண்டில் அடக்கப்பட்டது. ஈராக்கின் மொசூல் நகரை தலைமையகமாக அறிவித்து உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள இவர்கள், சர்வதேச கூட்டுப்படையினரால் மொசூல் நகரை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர்.
ஐ.எஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஈரான், ஈராக் நாடுகள் அறிவிக்க, அந்த இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று குழப்பமான தகவல்கள் மிஞ்சுகின்றன. அடி வாங்கிய பாம்பாக உள்ள ஐ.எஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற எச்சரிக்கையையும் பல்வேறு தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

நவீன களவு:
சர்வதேசமும் கணினிகளின் பிடியில் இயங்கிங்கொண்டிருக்க கடந்த மே மாதத்தில் ரான்சம்வேர் என்ற வார்த்தை இணைய உலகை புரட்டிப்போட்டது. வான்னாகிரை எனும் ஹேக்கிங் குழுவினர்கள் மருத்துவமனை, தொழிற்சாலை உட்பட பல நிறுவனங்களின் கணினிகளை முடக்கி தகவல்களை திருடியது. பணம் தந்தால், தகவல்களை திரும்ப தருவோம் என ஹேக்கிங் குழு பேரம் பேச, இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டன.
வெள்ளை மாளிகையில் கல் விழுந்தாலே வடகொரியாதான் காரணம் என சொல்லும் அமெரிக்கா, இந்த பிரச்சினையிலும் வடகொரியாவை நோக்கி கை நீட்டியது. எது நடந்தாலும் எங்களையே குறை சொல்வது நல்லதற்கல்ல என வடகொரியா பதிலளிக்க, வைரஸ் விவகாரத்தை விட அமெரிக்கா – வடகொரியா சண்டை சூடுபிடித்தது.

தூக்கி எறியப்பட்ட அதிகாரம்:
ஆபிரிக்காவின் குட்டி நாடான சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே இராணுவம் மூலம் வீழ்த்தப்பட்ட நிகழ்வு அதிக காலம் அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. முகாபேவுக்கும், துணை அதிபராக இருந்த எம்மெர்சன் நங்காக்வாவுக்கும் இடையே அதிகார போட்டி நிலவ எம்மெர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாள் காலையில் தலைநகர் ஹரரேவை இராணுவம் முற்றுகையிட, சிம்பாப்வேயில் இராணுவப் புரட்சி என செய்திகள் வெளியானது.
ஆனால், ஜனாதிபதி முகாபே பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது மட்டுமே இராணுவத்தின் நோக்கம் என்று கூறப்பட்டதை அடுத்து தான், இதன் பின்னர் எம்மெர்சன் இருப்பது தெரியவந்தது. சுற்றிலும் தனக்கு தடுப்பு கட்டப்பட்டதை அடுத்து பதவியை முகாபே இராஜினாமா செய்ய, மக்கள் ஆதரவுடன் புதிய அதிபராக எம்மெர்சன் நங்காக்வா பதவியேற்றார்.

சவுதி இளவரசரின் அதிரடி:
வளைகுடா நாடான சவுதியின் பட்டத்து இளவரசராக ஜூன் மாதம் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், செய்த அதிரடி மாற்றங்கள் சவுதி மீதான பழமைவாத பார்வைவை மாற்றியது.
மன்னர் சல்மானின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவரான இளவரசர் சல்மானுக்கு முக்கிய அதிகாரங்களை மன்னர் வழங்கியது அரச குடும்பத்தில் சலசப்பை உண்டாக்கியது.
சவூதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி, மீண்டும் சினிமா அரங்குகள் திறக்க முடிவு என 2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நவீன மாற்றங்களை அடைந்திருக்கும் என்று சல்மான் கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் உச்சமாக, கோடீஸ்வரர் அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அரசின் சொத்துக்களை, அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். எனினும், ட்ரம்ப் உடன் அதீத நெருக்கம் வைத்து கத்தார் உடனான உறவு துண்டிக்கப்பட்டதில் சல்மான் மீது சரமாரியான விமர்சனங்கள் விழுந்தது.

தலைநகர் பஞ்சாயத்து:
புராண காலம் தொட்டே ஜெருசலேம் நகரில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புனித தலங்கள் உண்டு. நவீன காலத்திலும் ஜெருசலேம் பிரச்சனை, இஸ்ரேல் – பாலஸ்தீன் நாடுகளுக்கு மட்டுமல்ல உலகிற்கே தீராத தலைவலியாக உள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவிக்க, காஸா முனையிலும், மேற்கு கரையிலும் தீ பற்றிக்கொண்டது. இதற்காக போராடிய பாலஸ்தீனியர்களில் சிலரது உயிர்களையும் இஸ்ரேல் வாங்கியது.
உலக அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ள ட்ரம்ப் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஜெருசலேமில் அமைய உள்ள ரயில் நிலையத்திற்கு ட்ரம்ப் பெயர் சூட்டப்படும் என இஸ்ரேல் மந்திரி பேட்டியளிக்க, ஜெருசலேம் விவகாரம் முடிவு எட்டப்படாமலேயே முடிந்து விடும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

மனிதம் குடித்த துப்பாக்கிகள்:
சிரியா, ஏமன், ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எப்போதும் போல இப்போதும் துப்பாக்கிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும் அப்பாவிகள் பலியாகிக்கொண்டு இருக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடந்துள்ளன. ஐரோப்பாவில் லண்டன், மான்செஸ்டர், பார்சிலோனா, பாரீஸ், இஸ்தான்புல், மொஸ்கோ ஆகிய நகரங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கியது.
கூட்டமாக மக்கள் இருக்கும் போது வாகனம் மூலம் மோதி தாக்குதல் நடத்தும் யுக்தியை ஐ.எஸ் தீவிரவாதிகள் லண்டனில் செயல்படுத்த, இதே விதமாக பல நகரங்களிலும் தாக்குதல்கள் அரங்கேறின.
அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பண்டிகை உற்சாகத்தில் பொதுமக்கள் கூடியிருக்க பக்கத்து கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியால் ஒருவன் சரமாரியாக சுட்டுத்தள்ள 29 பேர் உயிரிழந்தனர். நவம்பர் மாதத்தில் டெக்சாஸில் உள்ள சர்ச்சில் புகுந்து இதே போல ஒருவன் நடத்திய தாக்குதலில் 29 உயிர்களை துப்பாக்கி குடித்தது.

சூடான ஆபத்து:
கரியமல வாயு காரணமாக புவி அடைந்துள்ள வெப்பநிலை இந்த ஆண்டு இரண்டாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு பரிசில் உலக நாடுகள் ஒன்று கூடி ஒப்பந்தம் போட்டன.
ஆனால், பரிசில் ஒப்பந்தம் அமெரிக்காவின் வளர்ச்சியை பறிப்பதால் அதிலிருந்து வெளியேறுவதாக அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் அறிவித்தார்.
புவி வெப்பமயமாதலின் எதிர்மறை விளைவுகளாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய புயல்கள் உண்டானது. புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களின் மதிப்பு மட்டும் 290 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொடும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புவி சூடாவதை சிறிதளவாவது கட்டுப்படுத்தும் பரிஸ் ஒப்பந்தமும் தூக்கி எறியப்படும் நிலையிலேயே உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தூசு தட்டி செயல்படுத்தினால் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாமே ஒழிய வேறு வழியே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here