அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் எதையும் சாதித்துக்கொள்ள முடியும்!

0
151


மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே. அதிலும் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது அரசாங்கத்துக்கு உள்ளே தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் முனைவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன் என வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) மனோ கணேசனுக்கும், வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்..
அரசாங்கங்களுக்கு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாகவே இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதையும் சாதித்துக்கொள்ள முடியும். வரலாறு முழுக்க அப்படித்தான் நடந்துள்ளது. அந்த அழுத்தக் கொள்கை அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் கட்சிகளுக்கும், வெளியே இருக்கும் கட்சிகளுக்கும் பொருந்தும் விசேடமாக தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குப் பொருந்தும். ஏனெனில் இந்த நாட்டில் எதுவும் தானாகவே நடப்பது இல்லை. அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் எந்த விதமான உரிமைக் கோரிக்கைகளையும், பெரும்பான்மை கட்சிகள் சுய விருப்புடன் ஏற்றுக்கொண்டதில்லை.
ஆகவே எங்கே இருந்தாலும் எங்கள் அரசியல் பலத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் கட்சி எப்போதுமே கொழும்பு மாநகர சபை தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுள்ளது. இது தொடர்பில் நான் கடந்த முறையும் என் உடன்பாட்டை அவருக்குத் தெரிவித்திருந்தேன். மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பதை பகுத்து அறியும் பாங்கு அமைச்சர் மனோ கணேசனிடம் உண்டு. எந்த அடிப்படையில் தேர்தல்களைச் சந்தித்தால் அதிகளவிலான பிரதிநிதித்துவஙக்ளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் சரியாகத் தீர்மானிக்கிறார் என்றே நான் நம்புகின்றேன்.
இநத் தேர்தலில் அவர் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணிச் சின்னத்தில் கொழும்பிலும், ஏனைய பல மாவட்டங்களிலும், தனித்துப் போட்டியிடுகிறது.
அதேவேளை நாட்டின் வேறு பகுதிகளில் அவரது கூட்டணி அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கக் கட்சியுடன் சேர்ந்தும் போட்டியிடுகிறது. எனவே ஒரே நேரத்தில் அவர் தனித்துவத்தையும் பேணுகின்றார். அதேவேளை ஏனையோருடன் சேர்ந்தும் பயணிக்கிறார்.
கொழும்பில் அவரது கட்சி ஜனநாயக ரீதியாகப் பலம் பெற்று இருப்பது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பலம் சேர்க்கும் என நான் திடமாக நம்புகின்றேன். இதை நாம் கடந்த நெருக்கடியான காலகட்டஙக்ளில் பெரிதும் உணர்ந்தோம். எனவே கொழும்பு மாநகரசபை தேர்தலில், அமைச்சர் நண்பர் மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போக்குக் கூட்டணி உயரிய வெற்றிபெற வாழத்துகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here