தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக்களால் நினைவு கூரப்பட்டது!

0
528

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு நாள் நவம்பர் 27ம் நாளினை பிரான்சின் தென் பகுதி பரிசில் இருந்து 750 கிலோ மீற்றர் உள்ள துலுஸ்சு மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் புறோசன் என்னும் இடத்தில்  துலுஸ்சு வாழ் மாவீரர் பெற்றோர்  சகோதர உரித்துடையோர் துலுஸ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கும், அயல் பிரதேசங்களில் வாழுகின்ற தமிழீழ மக்கள் டிசெம்பர் 3ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகவும் எழுச்சி பூர்வமாகவும் நினைவு கூர்ந்தனர்.சரியாக 15.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றி வைக்க துயிலுமில்லப் பாடலைத்தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் உறவுகளுக்கான திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் வணக்கத்தை செலுத்தியிருந்தனர். மஞ்சள் சிவப்பு, எழுச்சி நிறங்களைக் மிகவும் அழகான சட்டத்திற்குள் மாவீரர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து எம்தேசத்தின் குழந்தைச் செல்வங்கள் மாவீரர் நினைவு சுமந்த பாடல் களுக்கு நடனத்தையும் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும் எங்கள் தேசியத் தலைவரின் பாடல்களுக்கும், மற்றும் எழுச்சிப்பாடல்களுக்கும் நடனம் வழங்கினர். மாவீரர் நினைவு சுமந்த பேச்சுக்கள், கவிதைகளும் இடம்பெற்றன. கரோக்கி இசை மூலம் பாரிசு  தமிழர் கலைபண்பாட்டுக் கழகப் பாடகர் திரு. கிருபா அவர்கள் விடுதலைப் பாடல்களையும், அங்கு வாழும் மூத்த பாடகர்களும் விடுதலைப்பாடல்களை வழங்கி மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருந்தனர்.  மாவீரர் நாள் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். தங்கள் நெஞ்சங்களில் என்று அழியாது சுவாச மூச்சுக்காற்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மாவீரர்களை நினைந்து பிரான்சின் ஒரு பகுதியில் கூட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தேசமக்கள் இங்கு வாழும் மக்களின் காப்பரணாக இருந்து வரும் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு அர்ப்பணிப்புடன் தேசப்பணியாற்றும் தேசப்புதல்வர்கள் பணியுடன் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தம் தேசப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்தியமை மிகப்பெரும் மாற்றத்தையும் இதே மாற்றம் தாயகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதையும் அனைவரும் நாம் காணக்கூடியதாக இருந்ததையும். தனியே எம் தேசப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதா? நாம் ஆண்டு தோறும் செய்யப்போகின்ற செயற்பாடாக அமையப்போகின்றதா? என்றும், எம் தேசத்தின் அரிய அற்புதமான மனிதராகவும், எமது பொது எதிரியாக இருக்கின்றவர்கள் கூட விரும்புகின்ற ஒரு அற்புத தலைவனாக இருக்கின்ற எங்கள் தமிழீழத் தேசியத் தலைவரை தெரியாத எங்கள் நான்காவது தலைமுறை அந்த தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், எம் மண்ணையும், மொழியையும் எவ்வாறு நேசிக்கின்றார்கள் என்பதை இவர்களின் கலை வெளிப்பாடுகள் மூலம் காண்கின்றோம். அதே நாங்கள் தான் எங்கள் காப்பர்கள், எங்கள் இனத்தின் மானத்தை, வீரத்தை, மனிதநேயத்தை உலகறியச் செய்ய வைத்து தங்கள் இனிமையான வாழ்வை எங்களுக்காக தங்கள் சந்ததிக்காக உவந்தளித்தவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்ற பார்வையுடன், பெயருடன் இருப்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தக் களங்கத்தை ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மொழியான்மை மிக்க எமது இளைய சந்ததியினர்தான் துடைக்க வேண்டும். அவர்களின் இலட்சியக் கனவை நிறைவேற்றுவோம் என்று; நாம் மண்ணுக்குள் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களைப் புதைத்திருக்கின்றோம்;. அவர்களோடு பழகி வாழ்ந்த பெரியவர்கள் தான் அவர்கள் பற்றிய கதைகளை கனவுகளை இளையவர்களுக்கு சொல்ல வேண்டும். குறிப்பாக நாம் வாழும் பிரான்சு தேசம் எத்தனை போர்களை அழிவுகளை சந்தித்த நாடு என்பதையும் ஒரு போரின் வலியும் வேதனையும் பயங்கரவாதமும் என்ன என்பதை அறியும் என்றும், பயங்கரவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அவப் பெயரை நாங்களும் எமது அடுத்த சந்ததியும் சுமக்கக்கூடாது என்றும், இந்த வரலாற்றுத் தவற்றை திருத்தி எழுதத் தவறுவோமாக இருந்தால் இந்தத் தலைமுறை தவறு செய்த சந்ததியாக வரலாறு எங்கள் எல்லோரையும் பதிவு செய்யும் என்றும் கூறியிருந்தார்.
வெளியீட்டு பிரிவின் வெளியீடுகளான நாட்காட்டி, இறுவெட்டுக்கள், கார்த்திகைப் பூ, தமிழீழ தேசியக்கொடி போன்றவற்றை மக்கள் பூரிப்போடு வாங்கிச் சென்றனர். நம்புங்கள் தமிழீழம் பாடலினை பாடி தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரம்  உச்சரிக்கும் வரை அனைத்து மக்களும் இருந்திருந்தனர். அண்மைக்காலங்களில் தேசிய நிகழ்வுகளிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் கலைஞர்கள், நடனங்கள் வழங்குவோர் தமது கலைநிகழ்வுகளை வழங்கி விட்டு உடனே மண்டபத்தை விட்டு மற்றையவர்களின் நிகழ்வுகளை பார்க்காமலும், மதிக்காமலும், சிந்திக்காமலும் செல்லுகின்றதொரு நிலைப்பாட்டினை  வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் துலுஸ்சு மாநகரத்தில் நடைபெற்ற இத்தேசிய மாவீரர் நிகழ்வுக்கு 100 கிலோ, 200 கிலோ மீற்றர்களில் இருந்தும் மக்கள் வந்து கலந்துகொண்டு இறுதிவரை இருந்தது பெரும் மனநிறைவினைத் தந்திருந்தது. அங்கு வாழும் தமிழீழ மக்களின் தேச விடுதலைப்பற்றையும் எந்தவித எதிர்பார்ப்புமில்லா கூட்டு வேலைப்பாடினையும், கண்டு மிகுந்த நம்பிக்கையோடு வெளிவந்தோம்.

   

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here