குமரியில் முடங்கியது இயல்பு வாழ்க்கை; சூறைக் காற்றுடன் மழை: 4 பேர் பலி!

0
286

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 12 மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை பெய்தது. பலத்த சூறைக்காற்றின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
குமரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் பல வழித்தடங்களிலும் போக்குவரத்து சேவை அடியோடு முடங்கியது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்தத் தாழ்வுப் பகுதியானது தீவிரமடைந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது நேற்று காலை மேலும் தீவிரமடைந்தது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்தது. குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்தப் புயலுக்கு ஓகி (ockhi) என பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை 2 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் துவங்கியது.
இந்த மழை நண்பகல் இரண்டு மணி தாண்டியும் ஒரே சீராக பெய்து கொண்டிருந்தது. பலத்த சத்தத்தோடு வீசிய சூறைக்காற்றால் வடசேரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி, ஈத்தாமொழி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மின்கம்பங்கள், சாலையோரம், வீட்டுப் பகுதிகளில் நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக வீசிய சூறைக்காற்றினால் பல வீடுகளிலும் மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளின் பிளாஸ்டிக் மேல்மூடிகள் போன்றவையும் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன.
மாவட்டம் முழுவதும் வீசிய சூறைக்காற்றில் பல மின்கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. போதிய மின்சாரம் இன்றி பெரும்பாலான தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சேவைகளும் முடங்கின. இதனால் ஒரே மாவட்டத்தில் இருந்தாலும் சொந்தங்களுக்குள் நலம் விசாரிக்கக் கூட முடியாமல் தவித்தனர் மக்கள்.
நாகர்கோவில் நகரின் பிரதானப் பகுதிகளான வடசேரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, ஸ்டேட் பேங்க் சாலை, புத்தேரி சாலை என பெரும்பாலான இடங்களில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தினாலும், மின் இணைப்புகளாலும் போக்குவரத்து தடைபட்டது, பலத்த மழையினால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. காலை நாளிதழ்கள், பால் உள்ளிட்டவற்றின் விநியோகம் பெரும்பாலான இடங்களில் நடைபெறவில்லை.இதனால் பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
பல இடங்களிலும் பெரிய, பெரிய மரங்கள் விழுந்து கிடந்தன. நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்கா, வடசேரி எஸ்.பி.ஐ வங்கி ஆகிய இடங்களில் இருந்த மரங்களும் முறிந்து விழுந்தன. கண்ணாட்டுவிளையில் ஆலமரம், தோட்டியோட்டில் அயினி மரம் என பெரிய மரங்களே மழைக்கும், சூறைக்காற்றுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் அடியோடு முறிந்து விழுந்தன. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளிலும் இயக்கப்பட்ட பேருந்துகள் மீண்டும் பணிமனைக்கே திருப்பி விடப்பட்டன.

உறவினர்கள் இன்றி நடந்த திருமணங்கள்!
முகூர்த்த நாளான நேற்று குமரி மாவட்டத்தில் ஏராளமான திருமணங்களும் இருந்தன. ஆனால் தொடர் மழையின் காரணமாக உறவினர்கள் வருகை தர இயலவில்லை. பாதி வழியில் மழையில் சிக்கிக் கொண்டனர். இதனால் கல்யாண விருந்துக்கு செய்து வைத்த உணவுகள் வீணாகின. ஒரு சில திருமணங்கள் வேறு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சில திருமணங்கள் சுற்றங்கள் இருந்தும் மழையினால் தனிமையில் நடந்தது.

இறப்பர் பால் வடிப்பு தொழில் முடங்கியது:
குமரி மேற்கு மாவட்டத்தில் பிரதானமாக உள்ள இறப்பர் பால்வடிப்புத் தொழில் முடங்கியது. இதே போல் குலசேகரம், பேச்சிப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இறப்பர் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களும் வேப்பமரம், தென்னை, வாழை மரங்களும் வேரோடு சாய்ந்தது. கோட்டாறு_வடசேரி சாலையில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது சபரி மலை சீசன் என்பதால் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் உள்ள கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர்களும் தவித்தனர். சுற்றுலா தலங்களும் வெறிச்சோடின.
தண்ணீர் சூழ்ந்த 50 வீடுகள்..
நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் தாழ்வான பகுதியில் உள்ள வந்த 50 வீடுகளை தொடர் மழையினால் தண்ணீர் சூழ்ந்தன. இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இவர்கள் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு அருகில் உள்ள அரசபள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டன.
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் தனித்தனியே 5 வீடுகளும் தென் தாமரைக்குளத்தில் 3 வீடுகளும் அகஸ்தீஸ்வரத்தில் 2 வீடுகளும் மழையில் இடிந்து விழுந்தன.
நாகர்கோவில்_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
நாகர்கோவில்_பறக்கை வழித்தடத்தில் மட்டுமே 4 கிலோ மீற்றருக்குள் 4 மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. ஓட்டோக்களும் இயக்கப்படவில்லை. தொடர் மழை, சூறைக்காற்றுக்கு பயந்து பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

சூறைக்காற்றுக்கு 4 பேர் பலி!
குமரி மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழை, சூறைக்காற்றின் காரணமாக நான்கு பேர் பலியாகி உள்ளனர். இதில் கார்த்திகைவடலியைச் சேர்ந்த ராஜேந்திரன்(40), ஈத்தாமொழி குமரேசன்(55) ஆகியோர் வீட்டின் முன்பகுதியில் தென்னை மரம் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். பளுகளில் வீடு இடிந்து அலெக்ஸாண்டர்(55) என்பவர் உயிர் இழந்தார். இதேபோல் மண்டைக்காடு பகுதியிலும் ஒருவர் உயிர் இழந்தார்.

பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை..
தொடர் மழையின் காரணமாக குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டன. நேற்றுமுன்தினத்தன்று நள்ளிரவு முதல் மழை பெய்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகளோ, மீட்பு குறித்த திட்டமிடுதலோ இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here