பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்த மிளாடிக்கிற்கு ஆயுள் தண்டனை!

0
247

முன்னாள் பொஸ்னிய செர்பிய தளபதி ரெட்கோ மிளாடிக் 1990களில் பொஸ்னிய யுத்தத்தின்போது இனப்படுகொலை மற்றும் ஏனைய அட்டூழியங்களில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரெப்ரெனிகா மற்றும் சரஜேவா முற்றுகையின்போது மிளாடிக் தலைமையிலான படையே பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்தது. மிளாடிக் பொஸ்னியாவின் கசாப்புக் கடைக்காரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஹேகில் உள்ள ஐ.நா நீதிமன்றம் இவர் மீதான 11 குற்றச்சாட்டுகளில் 10இன் மீது குற்றங்கண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 74 வயது மிளாடிக் மீதான தண்டனை வாசிக்கப்படும்போது அவர் நீதிமன்றத்தில் இருக்கவில்லை. நீதிபதிகள் மீது கத்தி கூச்சலிட்டதால் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
“இது பொய்யானது. இந்த நீதிமன்றத்தில் நீங்கள் கூறும் அனைத்துமே ஒரு பொய்” என்றே மிளாடிக் சத்தம்போட்டார்.
மிளாடிக்கிற்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கூறிய இந்த வழக்கு விசாரணையை நிறுத்தும்படி அவரது வழக்கறிஞர் குழு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்த நிலையிலேயே மிளாடிக் கோபத்தை வெளிக்காட்டி இருந்தார்.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மிளாடிக் நிராகரிப்பதாகவும் அவர் மேன்முறையீடு செய்யவிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். பொஸ்னிய குரோஷியா மற்றும் பொஸ்னிய இராணுவத்திற்கு எதிரான பொஸ்னிய சேர்பிய படை நடவடிக்கையின்போது மிளாடிக் அந்த படைக்கு தளபதியாக இருந்தார். அவர் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் ஐரோப்பாவின் மிக மோசமான அட்டூழியமாக கருதப்படும் 7,000க்கும் அதிகமான பொஸ்னிய ஆண்கள் மற்றும் ஆண் சிறுவர்கள் கொல்லப்பட்ட 1995 ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையில் மிளாடிக் முக்கிய பங்காற்றி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது ஆண்கள், சிறுவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றி தனியே அழைத்து செல்லப்பட்டே கூட்டாக படுகொலை செய்யப்பட்டனர்.
அதேபோன்று பொஸ்னிய தலைநகர் சரஜேவாவில் இடம்பெற்ற முற்றுகையின்போது மிளாடிக் படை நடத்திய ஷெல், மோட்டார் குண்டு மற்றும் ஸ்கைப்பர் தாக்குதல்களில் 10,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
எனினும் ஏனைய நகராட்சி பகுதிகளில் இடம்பெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தவிர, யுத்த குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
மிளாடிக்கின் துருப்புகள் மேற்கொண்ட பல குற்றச்செயல்களையும் தலைமை நிதிபதி அல்பொன்ஸ் ஒரியே வாசித்தார். இதில் பொஸ்னிய பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கற்பழிப்புகளில் ஈடுபட்டது, பொஸ்னிய கைதிகளை கொடூரமாக நடத்தியது, சரஜேவாவில் பொதுமக்களை பயமுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
1995 இல் யுத்தம் முடிந்த பின் தலைமறைவாக வாழ்ந்து வந்த மிளாடிக் 16 ஆண்டுகளின் பின்னரே பிடிபட்டார்.
இந்த தீர்ப்புக்கு, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாறுபட்ட பதில்கள் வந்துள்ளன. மதர்ஸ் ஒப் சிரெப்ரெனிகா என்ற குழு, இந்த தீர்ப்பு பாதி திருப்தியை அளிக்கிறது என்று கூறியுள்ளது.
ஆனால். தனது கணவரையும், போரில் இரண்டு மகன்களையும் பறிக்கொடுத்த ஒரு போஸ்னிய முஸ்லிம் பெண், மிளாடிக்கிற்கு இன்னும் கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏதோ ஒரு பகுதியில் மட்டும் அவர் செய்த இனப்படுகொலைக்காக இல்லாமல், பொஸ்னியா முழுவதும். அவர் செய்த இனப்படுகொலைக்கு தண்டிக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அல் ஹுசைன் இதனை நியாயத்துக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here