சில நொடிப் பொழுதுகள் சிரம் தாழ்த்துவோம்!

0
382

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை, 1995 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியவுடன், இயந்திரக்
கலப்பையால் உழுது எல்லா சமாதிகளையும், நடுகற்களையும் அடித்து நொறுக்கி ஒரே குவியலாக குவித்து விட்டது. பிறகு நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான் மீண்டும் இம் மாவீரர் துயிலும் இல்லம் கட்டி எழுப்பப்பட்டது. கட்டி எழுப்பப் பட்டதோடு மட்டுமல்லாமல் துயிலும் இல்ல வளாகத்திலேயே சிங்கள இராணுவத்தால் இடித்து நொறுக்கப்பட்ட அந்த இடிபாடுகள் சிலவற்றை எடுத்து ஒரு பெரிய குடையின் கீழ் கண்ணாடிப் பேழைக்குள் காட்சிக்காக வைத்து,
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண
இடப்பெயர்வுக்குப் பின்னர்
சிறீலங்காப் படையினர்
இங்கே உறங்கிய
எம் மாவீரர் செல்வங்களின்
கல்லறைகளை
சிதைத்து அழித்தனர்
அந்தக் கல்லறைச் சிதைவுகள்
இங்கே
சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
சில நொடிப் பொழுதுகள்
சிரம் தாழ்த்துவோம்.”

என்று நூல் வடிவக் கல்வெட்டில் தமிழில் ஒருபுறமும்,ஆங்கிலத்தில் ஒருபுறமும் பொறித்து வைக்கப் பட்டிருந்தது.
நான் யாழ்ப்பாணம் செல்லுகின்ற போதெல்லாம் எவ்வளவு பணி நெருக்கடிக்கிடையிலும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன். மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கலையம்சத்துடனும் ஒழுங்கமைவுடனும் கட்டமைக்கப் பட்டிருந்தது. மிகவும் அமைதி குடிகொண்டிருக்கும். சிறீலங்கா இராணுவம் எவ்வளவு உருத் தெரியாமல் சிதைத்தாலும், மீண்டும் அதேபோல் அல்லது அதைவிடச் சிறப்பாக கட்டமைக்க விடுதலைப் புலிகளால் முடியும் என்பதற்கு சாட்சியாக அம்மாவீரர் துயிலும் இல்லம் விளங்கியது.
ஓவியர் புகழேந்தி
( என்னுடைய தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து….)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here