மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூருங்கள்!

0
412

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – என  தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் தொடர்பாக கூறிய  இரத்தின சுருக்கமான  பதிவு இது.
மாவீரர்களினது வீரச்சாவு நிகழ்ந்த இடங்களும் நாட்களும் வேறுபட்டவை. எனினும் ஒரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை ஒரே நாளில் நினைவுகொள்ள கார்த்திகை 27 தெரிவு செய்யப்பட்டது. விடுதலைப்போரில் முதல் வீரச்சாவடைந்த லெப். சங்கர் வீரச்சாவடைந்த நாளே மாவீரர் நாளாக 1989ம் ஆண்டில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
1989 ஆம் ஆண்டில் இருந்து 2008 வரை தளத்திலும் புலத்திலும் ஒரே கூரையின் கீழ் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு புலத்தில் புல்லுருவிகள் படையெடுத்தன. ஆளுக்கு ஆள் பதவி வெறிபிடித்து ஆங்காங்கே மாவீரர் தினத்தை அனுட்டிக்கின்றனர்.
பேரினவாத சிங்களத்திடமும் , இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்தும் விடுதலை பெற்று எம் தமிழ் இனம் ஒருமையாக நிம்மதியாக வாழ வேண்டும் என போராடி உயிர் நீத்த உத்மர்களின் நாளை கேலிக்குரியாதாக, கேளிக்கைக்கு உரியதாக மாற்றாதீர்கள்.
2016 ஆம் ஆண்டு தாயகத்தில் மாவீரர் நாளை அனுட்டிக்க கூடியதாக இருந்தது. 2017 மாவீரர் நாளும் ஆபத்து இல்லாது அனுட்டிக்க முடியும் என மக்கள் நிம்மதியுடன் உள்ளனர். ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் பிரச்சார மேடையாக மாவீரர் நாளை பயன்படுத்த முண்டியடித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக உள்ளுராட்சி தேர்தல் வர இருப்பதால் தமிழ் அரசியல் கட்சிகள் மேலும் வலுவீச்சாக செயற்படுகின்றன.
தமிழ் அரசியல் வாதிகளே! தயவு செய்து உங்கள் தனிப்பட்ட அரசியல் அபில் ஆசைக்காக மாவீரர் தினத்தின் புனிதத்தை பயன்படுத்தாதீர்கள்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அரசியல் செல்வாக்கு நாளாக பயன்படுத்த அரசியல் வாதி ஒருவர் தீவீரம் காட்டி வருவதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.
கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 27-08 -2017 பிரான்சில் நடைபெற்றது. அங்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் இசைச்செல்வி உரையாற்றினார் அவரது உரையில் ” மாவீரர் நாளை ஒரே இடத்தில் நினைவு கூருவது தான் நாங்கள் இந்த மாவீரர்களுக்கு செய்யும் பணி, அதுதான் மாவீரர்களை நினைவுபடுத்தும் நல்ல நிகழ்வாக இருக்கும்” என்றார். அதுவே இம் முறை மாவீரர் நாளில் அனைவரிடமும் தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் செய்தி ஆகும்.

நன்றி:குறியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here