மூத்த ஊடகவியலாளர் கோபு அவர்களின் உடலத்திற்கு பெருமளவானோர் அஞ்சலி!

0
297

மட்டக்களப்பில் தனது 87வது வயதில் காலமான இலங்கை தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர் கோபு என அழைக்கப்படும் கோபாலரத்தினம் அவர்களின் உடலத்திற்கு பெருமளவானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.“எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை (15) காலமானார்.
யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை யாழ் சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.
இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.
அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர்.கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.
கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.
அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அன்னாரின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு மாபெரும் இழப்பு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ”தவுடலுக்கு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று கள்ளியங்காடு இந்துமயானத்தில் நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here