ஏமாற்றத்துடனே அடங்கிய தாயின் மூச்சு!

0
419

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாகத் தேடி அலைந்த மன்னாரைச் சேர்ந்த தாயின் மூச்சு, நேற்று ஏக்கத்துடனேயே அடங்கியது.
கொழும்பில் 2008ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மன்னார், முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அமலன் லியோனின் மனைவியும், ரொசான்லி லியோனின் தாயாருமான ஜெசிந்தா பீரீஸ் (55) என்பவரே நேற்று (14) மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் அமலன் லியோன் மற்றும் மகன் ஆகியோரை குறித்த தாய் தேடி வந்தார்.
கொழும்பிலுள்ள கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகளில் அமலன் மற்றும் ரொசான்லி லியோனின் அடையாள அட்டைகளும் அடங்கும். அது தொடர்பான வழக்கு கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக ஜெசிந்தா நீண்ட காலமாக கொழும்புக்கும் மன்னாருக்குமாக பேரலைச்சல் அலைந்திருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பையடுத்து அவர் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தன் கணவர் மற்றும் மகன் குறித்த பத்து ஆண்டு கால ஏக்கமும், அலைச்சலும் தந்த அழுத்தத்தினாலோ என்னவோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தரக் கோரி நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு, காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்த முக்கியஸ்தர்களுள் ஜெசிந்தாவும் ஒருவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here