காணாமல்போன சுவீடன் பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு!

0
606

 

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர் நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் தலை தற்போது கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டென்மார்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் டென்மார்க் காவல்துறையினர் தெரிவிக்கையில்,
பெண் ஊடகவியலாளரின் தலை ஒரு பையில் இருந்தது. அதே பையில் இரண்டு கால்களும் இருந்துள்ளன. அவரின் ஆடைகளைக் கொண்டுள்ள மற்றுமொரு பையும் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீட்டர் மேட்சனுக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில், பீட்டரின் கடல் சாகசங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்திருந்தார் பெண் ஊடகவியலாளர். இந்நிலையில், 11 நாள்கள் கழித்து தலை மற்றும் கால்களற்ற அவரது உடல், டென்மார்கின் கோபென்ஹெகன் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
கிம் வாலைக் கொலை செய்து, அவரின் உடலைச் சிதைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பீட்டர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கோபென்ஹேகன் அருகே உள்ள கடல் பகுதியில் பல தடவைகள் சுழியோடிகள் தேடுதல்களை மேற்கொண்ட நிலையிலேயே இவ்வாறு பைகள் மீட்கப்பட்டுள்ளன. அவை மேலே மிதந்து வராமல் இருக்க கனம் மிகுந்த உலோகத் துண்டுகளுடன் கட்டி கடலுக்குள் வீசப்பட்டிருந்தது.
அந்தத் தலையில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், அது கிம் வாலின் தலைதான் என்று தடயவியல் பல்மருத்துவர் உறுதிப்படுத்தியுள்ளார் .
கிம் வாலின் விலா எலும்பு மற்றும் பிறப்பு உறுப்பில் அவரது மரணம் நிகழ்ந்த சமயம் அல்லது மரணத்திற்கு சற்று கழித்து கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கடலுக்குள் தற்போது தலையும், காலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒரு பெண்ணின் தலை வெட்டப்படும் காணொளியொன்று, பீட்டருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிரைவ் ஒன்று கிடைத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கோபென்ஹேகன் கடற்கரையில் கிம் வாலை இறக்கி விட்டதாக முதலில் தெரிவித்த பீட்டர், பின்னர் தன்னுடன் கப்பலில் இருந்தபோது தலையில் ஏற்பட்ட ஒரு காயத்தால் அவர் இறந்துவிட்டதால், கடலுக்குள்ளேயே அவரைப் புதைத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here