ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

0
588

தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும்.

இந்த நூற்றாண்டு கண்டிராத மனிதப் பேரழிவை நிகழ்த்திய கொடுங்கோலன் மகிந்த ராசபக்சே மற்றும் குழுவை பொறுப்புக் கூறலில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பிக்க வைக்கும் சூழ்ச்சியின் நிழலில் சிங்கள-இந்திய-சர்வதேச சக்திகளால் திட்டமிடே உருவாக்கப்பட்டிருக்கும் தற்போதைய நல்லாட்சி(?) அரசு ஒருபோதும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வுகாணப்போபவதில்லை.

1972 மற்றும் 1978 களில் கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனங்களின் வழியேதான் தற்போதைய அரசியலமைப்பு சாசனத்தின் இடைக்கால வரைபும் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘ஏக்கிய ராஜிய’ என்ற வார்த்தை மயக்கத்துடன் தமிழர்களை ஏமாற்றும் மோசடியை தமிழர்களிடத்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திணிக்க முற்படுவது கடைந்தெடுத்த துரோகத்தனமாகும்.

வடக்குக் கிழக்கு இணைப்பற்ற சமஷ;டி என்ற பேச்சிற்கே இடமில்லாத ஒரு கண்துடைப்பு அரசியல் யாப்பை தமிழர்களை வைத்தே அமூல்படுத்துவதற்கு சிங்கள அரசு துடிக்கின்றது.
இலங்கையில் 60 சதவீதமான கடற்பரப்பைச் சுற்றி தமிழர்களே வாழ்கின்றனர். சமுத்திரத்தில் இருக்கும் கனியவளங்கள், மீன்பிடி வலயங்கள், கண்டமேடைகள், முக்கியமான நீர்ப்பரப்புக்கள், காணிகள், பொருளாதார வளங்கள் அனைத்துமே மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுகின்றது

காணி அதிகாரம் அரசுடமையாகும் பட்சத்தில் தமிழர் பிதேசங்களில் பிற பிரதேச மக்களையும் குடியேற்றுவதற்கான வாய்பே அதிகமாகக் காணப்படுகின்றது. இதுவே சிங்கள அரசின் கபடத்தனமான நகர்வும் கூட. தமிழர் வாழும் வடக்குக் கிழக்கின் குடிப்பரம்பலில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிங்களவரின் குடிப்பரம்பலை அதிகரிப்பதற்கான நோக்கமாகவே கொள்ளப்படவேண்டும்.

ஒருமுறை சம்பிக ரணவக்க சொன்னதுபோல், தனிநாடு கேட்வர்களை சமஷ;டி கேட்க வைத்தோம், சமஷ;டி கேட்டவர்களை அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேச வைத்துள்ளோம் என்று சம்பிக சொன்ன விடயம் மெய்யாகி இன்று அதிகாரப் பரவலாக்கமும் இல்லாமல் ‘இலங்கையர்கள்’ என்ற பதத்திற்குள் எம்மை முடக்கி ஒட்டுமொத்த தமிழினத்தையும் அம்மணமாக நிற்குமளவிற்கு வைத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

வார்த்தைகள் மாறினாலும் அடிப்படையில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கி தமிழின அழிப்பின் ஆணிவேரை நீடித்து நிலைக்கச் செய்யும் விதமாக கொண்டுவரப்பட்டிருக்கும் இடைக்கால வரைபு தமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு-கிழக்கு இணைப்பினை அடியோடு நிராகரித்துள்ளது. அதியுச்ச அதிகாரப் பரவலாக்கம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கத்தின் வரையறை கேள்விக்குரியதே. யாருடைய அளவுகோலின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வின் உச்சம் வரையறுக்கப்பட உள்ளது…?

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு 73 தடவைகள் கூடியிருந்த நிலையில் அவ் அமர்வுகளில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து எதுவும் குறிப்பிட்டிருக்காத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்(?) உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே பின் இணைப்பு ஒன்றை வழங்கியுள்ளார்கள்.

வடக்கு-கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்றும் சமஸ்டி அரசியலமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டுமெனவும் அந்த பின்இணைப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தோடு தற்போதைய வடிவத்திலுள்ள இடைக்கால வரைபை பிரதான இரு சிங்களக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் தாமும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எழுத்துமூலம் வாக்குறுதியளித்துள்ளதன் மூலம் தமிழர்களது இறையாண்மையினை சிங்கள பௌத்த பேரினவாதிகளின் காலடியில் அடமானம் வைத்துள்ளார்கள்.

இப் புதிய யாப்பில் சிறிலங்கா என்ற நாடு என்றுமே பிரிந்து ஒரு அலகாகச் செயற்பட முடியாது என்றும் அப்படியான முயற்சிகள் பற்றிப் பேசுவதே சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு இலங்கை அரசு என்றுமே பிரிக்கப்படாதது என வரையப்படுடுள்ளது. அப்படியாயின் இந்த புதிய யாப்பு யாருக்காக எழுதப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

வெளிவந்திருக்கும் இடைக்கால வரைபிலேயே அடிப்படை விடயங்கள் கருத்திலெடுக்கப்படாதவிடத்து இறுதி வடிவத்தில் இடம்பெறும் என எந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வாக்குறுதியளித்து வருகின்றார்கள்…?

மரபுவழியாக நாம் வாழ்ந்துவரும் எங்களது தாயகத்தில் எம்மை நாமே ஆட்சிசெய்யும் தன்னாட்சி அதிகாரத்துடன் தேசிய இனமாக இறையாண்மையுடன் வாழ வேண்டுமெனும் அரசியல் வேணவாவின் வெளிப்பாடாகவே எழுபதாண்டுகளாக பல்வேறு வழிகளில் போராடிக்கொண்டிருக்கின்றோம். அதற்காக விலை மதிப்பில்லா பெரும் உயிர் விலைகளை கொடுத்துள்ளோம். அவற்றையெல்லாம் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தூக்கியெறிந்துவிட்டு அடிமைகளாக வாழ எமது மக்களை நிர்ப்பந்திப்பதான பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

யாப்பு மாற்றம் பற்றிய விழிப்புணர்வையும் அதில் வரையப்பட்டுள்ள சரத்துக்களையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. கிராமம் கிராமமாகச் சென்று இப் புதிய யாப்பின் பாதிப்பை மக்களுக்குப் புரியவைப்பதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக் செய்யவேண்டும்.

ஓற்றை ஆட்சிக்குள் தமிழர்களுக்கு ஒரு நீதியானதும் சமாதானமானதும் சமத்துவமானதுமான அரசியல் தீர்வு கிடைக்காது என்று கருதியே திரு, எஸ். ஜே. வி செல்வநாயகம் அவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாகத் தனித் தமிழீழக் கோரக்கையை முன்வைத்தார். ஆகவே அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை ஆகிய நாம் இந்த இடைக்கால யாப்பு வரைபை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்.

சுதந்திர தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களதும் தோளோடு தோள் நின்று உயிரிழந்த மக்களதும் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் வழியே எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here