தியாகி திலீபனின் அகிம்சையை பாடவிதானத்தில் சேருங்கள்!

0
311

மகாத்மா காந்தி இறந்தபோது ஓர் அறிஞன் சொன்னான் காந்தி என்றொருவர் இருந்தாரா என எதிர்கால சந்ததி கேட்கும் என்று? அந்த அறிஞனின் வார்த்தை அர்த்தமுடையது.

நாற்பது நாள் உப்புச்சாத உண்ணாவிர தத்தை மகாத்மா காந்தி மேற்கொண்டிருக்க முடியாது என்ற எதிர்கால சந்ததியின் ஐயமே காந்தி என்றொருவர் இருந்தாரா? என்ற கேள்வி எழுவதற்குக் காரணமாக இருக்கும் என்பதே அந்த அறிஞன் கூறிய கருத்துக்கான அடிப்படையாகும்.

எனினும் காந்திய தேசத்துக்கே ஈழத் தமிழன் அகிம்சையை போதித்தான் எனும் போது, அந்த அறிஞன் கூறியது போன்று, தியாகி திலீபன் என்றொருவர் இருந்திருக்க முடியுமா? உண்ணாநோன்பிருந்து அவர் இறந்திருக்க முடியுமா? என்று எங்கள் எதிர்காலச் சந்ததியும் உலகும் கேட்குமளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது.

ஆம், பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து தன் உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபன் பற்றிய வரலாறுகள் எங்கள் எதிர்காலச் சந்ததியினரிடம் எவ்வாறு கைமாறப்படுகிறது – பங்கீடு செய்யப்படுகிறது என்பதைப்பார்க்கும் போது,

அந்த அறிஞனின் கருத்தை மீள்வாசிப்புச் செய்வதில் தவறில்லை என்றே கூறவேண்டும்.

விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தியாகி திலீபனின் நினைவு நாட்கள் பாடசாலைகள் தோறும் அனுஷ்டிக்கப்பட்டன.

சனசமூக நிலையங்கள், பொது அமைப்புக் கள், மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்கள் என எங்கும் தியாகி திலீபனின் தியாகம் போற்றப்பட்டது; எடுத்தியம்பப்பட்டது.

ஆனால் இன்று நிலைமை அதுவன்று. தியாகி திலீபனின் நினைவேந்தல் நடக்கின்றதாயினும் அதன் தாற்பரியம் மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை.

தியாகி திலீபன் தன்னுயிரை ஈகம் செய்த செப்ரெம்பர் 26ஆம் நாளிலேனும் தமிழ்ப் பாடசாலைகள் தியாகி திலீபனை நினைவுகூர்ந்து அகிம்சையின் உன்னதத்தை மாணவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும்.

எனினும் இதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை என்றே கூறலாம். அகிம்சை என்பது யாருக்கும்  எதிரானதன்று.

அது நீதியை நிலைநாட்டுவதற்கான மிக உன்னதமான வழி. இந்த வழியை மகாத்மா காந்தி பின்பற்றினார். தொடர்ந்து தியாகி திலீபன் மேற்கொண்டார்.

கத்தியின்றி இரத்தமின்றி தன்னை வருத்தி நீதியை; உரிமையை; சுதந்திரத்தை நிலைநாட்டுதல் என்பது போற்றப்பட வேண்டும்.

தியாகி திலீபன் விடுதலைப் புலிகள் அமைப் பைச் சார்ந்தவர். எனவே அவரைப் போற்றுதல் ஆகாது என்று யார் நினைத்தாலும் அஃது தியாகி திலீபனுக்கு எதிரானதல்ல. மாறாக அகிம்சைக்கு எதிரானது.

அகிம்சை பலவீனப்படுமாக இருந்தால், அகிம்சையைப் போற்றுவதற்குத் தடைவிதிக் கப்படுமாக இருந்தால் ஒரு கண்ணியமான போராட்டம் ஓரங்கட்டப்படும் என்பதோடு, மகாத்மா காந்தியின் அகிம்சை ஒதுக்கப்படுகிறது என்பதாகப் பொருள் கொள்ளப்படும் என்பதால், தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்டம் தமிழ்ப் பாடத்திலேனும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அகிம்சை உணர்வு மாணவர் களிடம் வீரியம் பெறும்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here