வடக்கு தொடருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபின் 41 விபத்துக்கள்;35 உயிரிழப்புக்கள்!

0
195

வடக்கிற்கான தொடருந்து சேவை இடம்பெற்றதன் பின்னர் 41 புகையிரத விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் எங்களது ஊழியர்கள் கடமையில் உள்ள கடவைகளில் எந்த விபத்துக்களும் ஏற்படவில்லை. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொடருந்து கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவோம் என வடக்கு, கிழக்கு தொடருந்து கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தாண்டிக்குளம் தொடருந்து கடவையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தமையை கண்டித்து அப்பகுதி மக்களால் தொடருந்தை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது மக்கள் பிரதிநிதிகளும், பொலிஸாரும் அங்கு கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் தொடருந்து திணைக்களத்திற்கு உரித்தான கடவைக்கு சென்று தொடருந்துக் கடவை காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இதனை நாம் கண்டிக்கின்றோம்.
எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த நிலையிலான பொலிஸ் அதிகாரியானாலும் தொடருந்துக் கடவை காப்பாளர்களிடம் பொதுவான மன்னிப்பை கோர வேண்டும்.
வடக்கிற்கான தொடருந்து சேவை இடம்பெற்றதன் பின்னர் 41 தொடருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் எங்களது ஊழியர்கள் கடமையில் உள்ள கடவைகளில் எந்த விபத்துக்களும் ஏற்படவில்லை.
இவ் விபத்துக்கள் பொலிஸாரின் கவனயீனத்தால் ஏற்பட்ட விபத்துக்களும் தொடருந்து திணைக்களம் அவ்விடங்களில் இருந்து தமது ஊழியர்களை வெளியேற்றியமையினாலுமே ஏற்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டமையினாலும் ஏற்பட்ட விபத்துகளுக்கு தொடருந்து திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். பொலிசார் எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
இது தவிர, இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்டதான தானியங்கி சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து அகற்றப்பட்டவை. இந்த சமிக்ஞை விளக்குகள் அந்த நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்டவை என்பதனை நாம் உறுதிப்படுத்துவோம்.
இந்த சமிக்ஞைகள் தொடர்ந்தும் இயங்குவதனால் மின்சார சபைக்கு பெரும் நட்டம் ஏற்படுவதுடன் அதில் உள்ள மின்குமிழ்கள் தொடர்ந்து பழுதடைவதால் அதனை இந்தியாவில் இருந்தே கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஆகவே தொடருந்து திணைக்களம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். போக்குவரத்து அமைச்சர் எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினையும் பழிவாங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்த வேண்டும்.
இந்த நாட்டின் பிரஜைகளான தொடருந்துக் கடவை காப்பாளர்களை மனிதர்களாக மதித்து அவர்களது சேவைக்கான கௌரவத்தினை வழங்கி நிரந்தர நியமனத்தினை வழங்க முன்வர வேண்டும் என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here