யாழில் காவல்துறை மீதான தாக்குதலுக்கு புலிகளைத் தொடர்புபடுத்தும் பூஜித!

0
254

யாழில் சிறிலங்கா காவல்துறையினர் மீது தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே காரணம் என சிறிலங்கா காவல்துறை மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரண்டு காவல்துறையினர் மீது, உந்துருளிகளில் பின்தொடர்ந்த ஆயுதக் குழுவினர், வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ் குடாநாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினருடன் காவல்துறையினரை இணைத்து தேடுதல் வேட்டைகள், சுற்றிவளைப்புக்களை ஆரம்பித்து யாழ் குடாநாட்டை சரியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருப்பதாக காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படும்வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீதான வாள்வெட்டுத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகையில், நேற்று (30) மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதக்குழுவினர் வாள்களால் கடுமையாக வெட்டியுள்ளனர்.
ஆறு அல்லது ஏழு மோட்டார் சைக்கிள்களில் 14 முதல் 15 பேர் கொண்ட குழுவே இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தக் குழுவுக்குத் தலைமைதாங்கியவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், ஆவா குழுவின் உறுப்பினர் என்றும் தமக்குத் தெரியவந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்து ஆவா குழுவினரை விடுதலைப்புலிகளின் குழுவாக காட்டியுள்ளார். இது தமிழ் மக்களை கடும் விசனமடைய வைத்துள்ளது.
குறித்த குழுவானது தமிழ் மக்களைத் தாக்கி துன்புறுத்தி மக்களின் சொத்துக்களை சூறையாடிவரும் குழு. இவ்வாறான குழுக்களை விடுதலைப்புலிகள் அமைப்பினருடன் தொடர்பு படுத்துவதென்பது எந்த ஒரு தமிழராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதேநேரம், யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு மற்றும் மண் அகழ்வு போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்றிலும் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டிருந்தார்.
இதில் வடமாகாண முதலமைச்சர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து கவலையடைவதாகத் தெரிவித்த அவர், இந்த நிலைமைகள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது என்பதுடன், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here