பிரான்சில் இடம்பெற்ற வில் நெவ் தமிழ்ச் சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டி!

0
1419

வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கம், வில் நெவ் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2017 நேற்று ( 02.07.2017) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

பொதுச்சுடரினை வில் நெவ் தமிழ்ச்சோலை நிர்வாகி திரு.சிவபாலன் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விந்துசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு. தினேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச் சுடரினை 13.03.1991 அன்று மன்னார் பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர் வணக்கம் செய்துவைத்தார்.

மங்கள விளக்கினை வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சிவநேசன் தயாளினி, சசிகுமார் சுபாசினி, சுதாகரன் ரேணுகா, இந்திரஜித் சுவஸ்திகா, சிவதாசன் ஜனனி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி துணை முகாமையாளர் திரு.பீலிக்ஸ் அவர்கள் மெய்வல்லுநர் போட்டி வீரர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.

வில்நெவ் பிராங்கோ தமிழ்ச்சங்க செயலாளர் திரு.ரஞ்சித் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து வில்நெவ் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் அணிநடை இடம்பெற்றது. அணிநடை அணிவகுப்பை பிரதம விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எல்லாளன், சங்கிலியன் ஆகிய இல்லங்களிடையே மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றன. குறித்த இரண்டு இல்லங்களும் தமது இல்லங்களை சிறப்பாக அலங்கரித்திருந்தனர். ஒவ்வொரு இல்லமும் தமது இல்லங்களின் பெயர்களுக்கு ஏற்றதுபோன்று தமது இல்லங்களில் எல்லாளன், சங்கிலியன் ஆகியோர் குறித்த விடயங்களை அடையாளப்படுத்தியுமிருந்தனர்.
இல்ல வடிவமைப்பில் எல்லாளன் இல்லம் 15 புள்ளிகளையும் சங்கிலியன் இல்லம் 10 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
தமிழ்ச்சோலை மாணவிகளின் உடற்பயிற்சி அணிவகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
நின்றுபாய்தல், பிசுக்கோத்து உண்ணுதல்;, கயிறடித்தல், கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை, ஓட்டம், தண்ணீர் நிரப்புதல் போன்ற மேலும் பல்வேறு விளையாட்டுக்கள் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
விநோத உடைப்போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. அவை குழுப்போட்டிகளாகவும் தனிப்போட்டிகளாகவும் இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பதக்கமும் சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
கடும் மழை, வெய்யில் எனப் பாராது மாணவர்களுடன் உழைத்த ஆசிரியை திருமதி திருவருட்செல்வி சுதாகரன் அவர்கள் வில்நெவ் சங்கத்தினரால் மதிப்பளிப்புச் செய்யப்பட்;டார்.
இல்லங்கள் பெற்ற முடிவுகளின்படி எல்லாளன் இல்லம் 566 புள்ளிகளையும் சங்கிலியன் இல்லம் 504 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன. இரண்டு இல்லத்தினரும் தாம்பெற்ற வெற்றிக் கிண்ணத்துடன் மைதானத்தைச் சுற்றி ஒற்றுமையாக வலம்வந்தமை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. மேத்தா அவர்கள் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் அதன் தேர்வு நடத்துநர் திரு.அகிலன் அவர்களும் ஆற்றியிருந்தனர்.
திரு.மேத்தா அவர்கள் தெரிவிக்கையில், எமது மண்நோக்கிய இவர்களின் செயற்பாடுகள் மனமகிழ்ச்சியைத் தருகின்றது. நான்காம் தலைமுறையினர்கூட இங்கே இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர். இதற்கு தமிழ்ச்சோலை மற்றும் பெற்றோர்களின் பங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டியதாக உள்ளது. எதிர்காலத்தில் எமது செந்நிறக்கொடி எம் தேசத்தில் மீண்டும் பறக்கும். இளைஞர் ஒருவரே இந்நாட்டின் அதிபராக உள்ளதுபோல இளைஞர்களின் வெற்றியை இந்த விளையாட்டுப்போட்டியில் காணமுடிந்தது. மாவீரர்கள் மண்ணோடும் தேசத்தோடும் வாழ்கின்றார்கள் அந்தக் கனவுகளோடு அனைவரும் பயணிப்போம் என்றார்.
திரு.அகிலன் தனது உரையில், ஈழத்தமிழர்கள் கல்வியில் எவ்வளவு சிறந்தவர்களோ அதேபோன்று விளையாட்டுக்களிலும் சிறப்புப் பெற்றுவருகின்றனர். எதிர்காலத்தில் இந்த வில்நெவ் மண்ணிலும் வீரர்கள் சிறப்படையவேண்டும். தமிழீழத் தேசியத் தலைவர் 2008 ஆம் ஆண்டு தனது மாவீரர் நாள் உரையில் கூறியதுபோல இளைஞர்களின் கையிலேயே எமது விடுதலைப்போராட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை இந்த இளைஞர்கள் உணர்த்தி நிற்கின்றார்கள் என்றார்.
கொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here