பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி ஏ-32 பூநகரி மன்னார் வீதியை மறித்து போராட்டம்.

0
530


இரணைதீவிலுள்ள பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி கடந்த 54 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் மக்கள் இன்று ஏ-32 பூநகரி மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மக்களை வீதியிலிருந்து அகலுமாறு தெரிவித்த காவல்துறை , அவர்களுக்கு ஆதரவான இரணைதீவு பங்கு தந்தையையும் கடுமையாக திட்டியுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தினை விடுவிக்கக் கோரி மே மாதம் முதலாம் திகதியிலிருந்து முழங்காவில் இரணைமாதா நகரில் தொடர்ச்சியாக நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத நிலையிலேயே இன்றை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, அந்த இடத்திற்கு வந்த பூநகரி காவல்துறை அத்தியட்சகர், அவ்விடத்திலிருந்து மக்களை அகலுமாறு தெரிவித்ததுடன், வீதி மறிப்பில் ஈடுபடுவதற்கான கிளிநொச்சி நீதிமன்றின் தடையுத்தவையும் காண்பித்து அகன்று செல்லுமாறு கோரியுள்ளார்.
ஆனால் இதுவரை எவரும் எமது போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. எனவே தான் நாம் இவ்வாறு வீதி மறிப்பில் ஈடுபட்டுள்ளோம். நாம் அகன்று செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு நின்ற இரணைதீவு பங்கு தந்தையை பூநகரி காவல்துறை அத்தியட்சகர், சகல பிரச்சினைகளுக்கும் நீங்களே காரணம், மக்களை ஒன்று திரட்டி பங்குத்ததந்தையே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் என கடுமையாக திட்டியுள்ளார்.
மேலும் கலைந்து செல்லாது இங்கிருந்தால், இந்த இடத்திலிருந்து உங்களை அகற்றுவோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தற்போது ஏ-32 வீதியின் ஒரு வழி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here