எழுக தமிழ் எழுச்சி கண்டேனும் ஒன்றுபடுவோம் வாரீர்!

0
455
கிழக்கில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி ஒரு புதிய திருப்புமுனை என்பதை எவரும் அடியோடு நிராகரித்து விடமுடியாது. வரலாறு காணாத  அளவில் கிழக்கில் எழுச்சிப் பேரணி நடந்துள்ளது.
இதைச் சொல்லும் போது சிலர் இதென்ன பெரிய விடயம் என்று கூட தமக்குள் முணுமுணுக்க லாம்.இருந்தும் இவ்வாறு முணுமுணுப்பவர்கள் கூட  பேரணி சரி, பொதுக்கூட்டம் சரி. இதில் தமிழ் மக்களின் பிரசன்னத்தை ஏற்படுத்துவதென்பது சாதாரண விடயம் அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர்.
அதாவது எந்தப் பேரணியாயினும் தமிழ் மக்கள் தமக்குச் சரியானது; நியாயமானது என்று  கருதும்போது மட்டும்தான் அதில் பங்கேற்பர்.
மாறாக அவர் சொல்லிவிட்டார், இவர் கேட்டு  விட்டார் என்பதற்காக பேரணியில் பங்கேற்பதென்பது  ஒருபோதும் சாத்தியப்படாத விடயம்.
 இது பொதுவான நிலைமை எனும்போது  கிழக்கின் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளைத் தெரிவித்துள்ளனராயின் அதனை எவரும் சாதாரணமான விடயமாகக் கருதிவிடக்கூடாது.
கிழக்கு மாகாணத்தில் பேரணி நடத்த முடியாது. தமிழ் மக்கள் பேரவையால்  அதைச் செய்ய இயலாது என்ற வாதப்பிரதிவாதங்களின் மத்தியில் வரலாறு காணாத அளவில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி உணர்வுபூர்வமாக நடந்துள்ளதெனின் அது   ஒவ்வொரு தமிழ்மகனும்  தம் இதயத்தால் வழங்கிய ஆதரவு என்பது மறுக்கமுடியாத உண்மை.
எனவே நடந்து முடிந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி  பற்றிய விமர்சனங்களை தமிழினம் தவிர்ந்த வேறு இனத்தவர்கள் செய்யலாமேயன்றி  அதனைத் தமிழினம் சார்ந்தவர்கள் செய்வதென்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல. அதிலும் தமிழ் அரசியல் தலைமையிலும் பாராளுமன்றம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளிலும் அமர்ந்திருக்கக் கூடியவர்கள் எவரும் அதைச் செய்யக்கூடாது.
ஏனெனில் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி என்பது தமிழ்மக்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு.
 அதிலும் காணாமல்போனவர்கள், சிறைகளில்  வாடும் தமிழ் அரசியல் கைதிகள் என்ற பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகி இன்று வரை கண்ணீரும் கம்பலையுமாக அலைகின்ற எங்கள் தமிழ்  உறவுகளின் ஒரு பலமான கோசத்தின் வெளிப்பாடு.
இவை யாவற்றிற்கும் மேலாக யுத்தத்திற்குப் பின்பு எங்களது உரிமைக்கு இதுவரை பொறுப்புக் கூறாமல் காலம் தாழ்த்தப்படும் விடயத்தில் தலையிடுமாறு சர்வதேசத்தின் ஆதரவைக் கோருகின்ற கோசத்தின் வெளிப்பாடு.
ஆகையால் சுயநல அரசியல் என்ற  எல்லையைக் கடந்து எங்கள் தமிழினம் – எங்கள் தமிழினத்து உரிமை என்ற வகையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு தனித்தும் ஒருமித்தும் ஆதரவு வழங்குவது தமிழினத்தார் கடமை.
அதேவேளை தமிழினத்தின் அரசியல் தலைமை  என்ற பெயரால் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை சுட்டிக்காட்டி, இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்துங்கள்; அந்தத் தீர்வு வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி என்பதாக இருப்பதை  உறுதி  செய்யுங்கள்;  தமிழ் அரசியல் கைதிகளை  உடன்  விடுதலை செய்யுங்கள்; காணாமல் போனவர்களுக்கு  நடந்தது என்ன என்பதையும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதையும் வெளிப்படுத்துங்கள்; தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பை முற்றாகக் கைவிடுங்கள் என்று கூறுங்கள்.
 இதைச் செய்யத் தவறின் தமிழ்மக்கள் அகிம்சை  வழியில் தங்கள் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்று எச்சரியுங்கள்.  இதையும்  ஒருபடி தாண்டி  தமிழ்மக்களுக்கான தீர்வை தாமதித்தால் உங்களுக்கான எங்கள் ஆதரவை அடியோடு விலக்குவோம் என்று துணிந்து கூறுங்கள். இதைச் செய்வதற்கு நீங்கள் தயங்கினால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் நிச்சயம் தங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுவார்கள்.
எனவே, அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே!  எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் பிரவாகம் கண்ட பின்னேனும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக எங்கள் தமிழினத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்கக் கூடாதா?
ஆம் ஒன்றுபடுங்கள். நல்லாட்சியை நம்புவதை விடுத்து  நடக்க வேண்டியதை எடுத்துரையுங்கள்.
தமிழ்மக்கள் சுதந்திரமாக  வாழ வேண்டும் என்பதை  சர்வதேசத்திடம் இடித்துரையுங்கள். இதைச் செய்யும்போது எங்களுக்கான தீர்வு சாத்தியமாகும். இது சத்தியம்.
(வலம்புரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here