கிழக்குத் தமிழ் உறவுகள் எழுக தமிழில் திரண்டால் …

0
550
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெறவுள்ளது.
எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றது. எவரும் எதிர்பாராத வகையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் வெற்றி, உலகத் தமிழ் உறவுகளுக்கு எங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அலை கடலெனத் திரண்ட மக்கள் கூட்டம் கண்டு நெக்குருகாதவர் இல்லை எனலாம்.
தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பில் யாழ்பபாணத்தில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியால் தென்பகுதி அதிர்ந்துபோனது. வடக்கின் முதலமைச்சர் மீது சீறிப்பாயுமளவில் பொது எதிரணியினர் கடுப்படைந்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தரப்பும் வடக்கின் முதல்வர் மீது கடுப்படைந்து கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.
இருந்தும் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் அமைப்பு. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தேவையான ஒன்று என முதலமைச்சர் விக்னேஸ்வரன் இறுமாப்புடன் பதிலளித்தார்.
வடக்கின் முதலமைச்சர் அதிர்ந்துபோவார் என்று நினைத்த பேரினவாத சக்திகளுக்கு முதலமைச்சரின் துணிச்சல் தங்களின் கண்டனங்கள், ஊர்வலங்கள் எதுவும் பயனற்றது என நினைத்தபோது அவர்கள் மெளனமாகிப்போனர்.இந்த உண்மையை எங்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் உறவுகள் அறியாததல்ல.
எனவே, கிழக்கு மாகாணத்தில் நடக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கிழக்கின் தமிழ் உறவுகள் ஒன்று சேர்ந்து ஓரணியாக பேரணியாகி எங்கள் தாயகம், வடக்கும் கிழக்கும் எனக்கோசம் எழுப்பி வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
வடக்கும் கிழக்கும் இணைவதாயின் அதற்காக கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்துதல் என்ற நிபந்தனைகளின் கீழ் கிழக்கும் வடக்கும் இணைவதற்கு கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்; பூரண ஆதரவு என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பேரணியாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அமையும் என நம்பலாம்.
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி எங்கள் சிங்கள சகோதரர்களுக்கோ, முஸ்லிம் சகோதரர்களுக்கோ எதிரானது என்றுயாரும் கருதிவிடக்கூடாது.இவ் எழுச்சிப் பேரணி இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்துவது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறாக அமைந்தால், இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும்என்பதை எடுத்துக்கூறுவது.
ஆனால் இன ஒற்றுமையை, இன சமத்துவத்தை நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக்கொண்ட இவ் எழுச்சிப் பேரணியில் சிங்கள முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவிப்பார்கள் ஆயின் அதன் கனதி பன்மடங்காகும்.
அதே நேரம் நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவும் பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் அனைத்துரிமைகளும்  சமமாக இருத்தல் வேண்டும் என்பதை அரசுக்குக் கூறுவதாகவும் அமையும்.
எனவே கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் எழுச்சிப் பேரணி என்றும் இல்லாத பேரணியாக, மக்களின் பேராதரவுடன் நடக்குமாயின் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும் எனலாம்.
ஆகவே கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள் தமது வரலாற்றுக் கடமையாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை உலகம் அதிசயிக்கும் வண்ணமாக திரண்டெழுந்து ஜெனனாயக ரீதியில் – அகிம்சை வழியில் வெளிக்காட்ட வேண்டும் இது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமானதாகும்.
– valampuri.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here